”தமிழகத்தில் தற்போது நான்கு முனைப் போட்டி இருப்பது போலத் தெரிந்தாலும், தேர்தல் நெருங்கும் போது அது திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையேயான இருமுனைப் போட்டியாகவே மாறும்” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பரபரப்பு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, 2026 சட்டமன்றத் தேர்தல் களம் குறித்துப் பேசும் போது கூறியதாவது,
“தற்போது தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. நான் யாரையும் சிறுமைப்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், தமிழக அரசியலின் வரலாற்றைப் பார்த்தால், தேர்தல் நெருங்கும் வேளையில் களம் என்பது இரண்டு பெரிய கூட்டணிகளுக்கு இடையேயான இருமுனைப் போட்டியாகவே மாறும். இதுதான் யதார்த்தம்.”
யாரைக் குறிப்பிடுகிறார் அண்ணாமலை?
விஜய்யின் வருகை மற்றும் சீமானின் வாக்கு வங்கி அதிகரிப்பு ஆகியவை தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், அண்ணாமலையின் இந்தத் தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன் மூலம், பாஜக மீண்டும் அதிமுக-வுடன் இணைந்து ஒரு பலமான கூட்டணிக் களத்தையே முன்னிறுத்துகிறது என்பதை அண்ணாமலை சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையின் இந்தக் கருத்துக்குத் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சித் தரப்பிலிருந்து வரும் நாட்களில் காரசாரமான எதிர்வினைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.