ஜனநாயகன் படத்திற்கு அடுத்தடுத்து வரும் முட்டுக்கட்டைகள்!.. டெல்லிக்கு விரைந்த படக் குழு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகப் பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம், தற்போது டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு விதித்த தடையை எதிர்த்துப் படத் தயாரிப்பு நிறுவனம் (KVN Productions) இன்று மேல்முறையீடு செய்துள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு தாமதம் செய்வதாகக் கூறித் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, “படத்திற்கு உடனடியாக U/A சான்றிதழ் வழங்க வேண்டும்” என நேற்று (ஜனவரி 9) அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தலைமை நீதிபதி அமர்வின் ‘திடீர்’ தடை:
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் அவசர மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு.

“சென்சார் போர்டு தனது வாதங்களை முன்வைக்கப் போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை” எனக் கூறி, தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
மேலும், சென்சார் போர்டின் தன்னாட்சி அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது குறித்துக் கேள்விகளை எழுப்பினர்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு:
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தடையால் படத்தின் ரிலீஸ் தேதி கேள்விக்குறியானது. ஏற்கனவே ஜனவரி 9-ம் தேதி வெளியாக வேண்டிய இப்படம் தள்ளிப் போனதால், சுமார் ₹500 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, இன்று (ஜனவரி 10) படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. “தணிக்கை வாரியத்தின் ஒரு சில உறுப்பினர்களின் உள்நோக்கம் கொண்ட புகாரால் படத்தின் வெளியீடு முடக்கப்பட்டுள்ளது என்றும், உயர் நீதிமன்றத் தடையை நீக்கிப் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும்” என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

பொங்கலுக்குப் படம் வெளியாகுமா?
தற்போது இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி முன்னிலையில் அவசர வழக்காக முறையிடப்பட உள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டுச் சாதகமான தீர்ப்பை வழங்கினால், ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜனவரி 14 பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப் போராட்டங்களுக்கு மத்தியில், தமிழக அரசியலிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரைக்கு வருமா? என்பது இன்னும் சில தினங்களில் உறுதியாகிவிடும்.

Leave a Comment