அரசியல் வேறு.. நட்பு வேறு!.. கேப்டன் விஜயகாந்த் பற்றி முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..

தேமுதிக நிறுவனரும், தமிழ் திரையுலகின் ‘கேப்டன்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பர் 28, 2025) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில், விஜயகாந்துடனான தனது ஆழமான நட்பை வெளிப்படுத்தும் விதமாக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அன்பைப் பெற்ற மக்கள் நாயகன்!
முதலமைச்சர் தனது பதிவில், “ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் எனது அருமை நண்பர் விஜயகாந்த்” எனப் பாராட்டியுள்ளார். அரசியலில் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் இருவருக்கும் இடையே இருந்த நட்பு மாறாதது என்பதை இந்தப் பதிவு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

நற்பணிகளை நினைவு கூர்கிறேன்:
விஜயகாந்தின் கொடை உள்ளம் மற்றும் அவரது அரசியல் பணிகளை நினைவுகூர்ந்த முதல்வர், “அவரது நினைவு நாளில், அவர் ஆற்றிய நற்பணிகளை மனதார நினைவு கூர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுடன், விஜயகாந்த் மற்றும் மு.க.ஸ்டாலின் இருவரும் ஒன்றாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் பழைய புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரசியல் தலைவர்கள் மரியாதை:
விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி, கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கித் தங்களது தலைவரின் நினைவைப் போற்றி வருகின்றனர்.

நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கி, நடிகர் சங்கத் தலைவராகப் பணியாற்றி, பின்னர் தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கி எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த். அவர் மறைந்தபோது அவருக்கு அரசு மரியாதை அளிக்க முதல்வர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment