2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் சுப்மன் கில் இடம் பெறாதது குறித்து, பிசிசிஐ (BCCI) முதன்மைத் தேர்வாளர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
சஞ்சு சாம்சனுக்கு புதிய பதவி:
செய்தியாளர்களிடம் பேசிய அஜித் அகர்கர், “இந்த முறை அணியின் காம்பினேஷனை (Team Combination) நாங்கள் கூர்ந்து கவனித்தோம். விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இனி தொடக்க வீரராக (Opener) களம் இறங்கப் போகிறார். இது அணியின் சமநிலையை அதிகரிக்கும் என நம்புகிறோம்,” என்று தெரிவித்தார்.
சுப்மன் கில் நீக்கப்பட்டது ஏன்?:
சுப்மன் கில் நீக்கம் குறித்துப் பேசிய அவர், “சுப்மன் கில் தற்போது ரன்கள் எடுக்கத் தடுமாறி வருகிறார். கடந்த உலகக்கோப்பையிலும் அவர் விளையாடவில்லை. ஒரு தொடருக்கு 15 வீரர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, யாராவது ஒரு சில சிறந்த வீரர்களைத் தவறவிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கில்லை அணியில் சேர்க்க முடியாதது துரதிஷ்டவசமானதுதான்,” என்று கூறினார்.
அபிஷேக் சர்மாவுக்கு முன்னுரிமை?:
தொடக்க வீரராகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இளம் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதே, சுப்மன் கில் ஓரங்கட்டப்படக் காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேபோல், இஷான் கிஷனின் மீள்வருகையும் கில்லுக்கான கதவுகளைத் தற்காலிகமாக மூடியுள்ளது.
இந்த அதிரடி மாற்றங்களுடன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி 2026 உலகக்கோப்பையை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.