தனித்திரு.. விழித்திரு.. காங்கிரஸை அறவே தவிர்த்திரு!.. விஜய்க்கு விஜய பிரபாகரன் கொடுத்த ‘பகீர்’ அட்வைஸ்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் பரபரப்பான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய்க்குத் தம்பி என்ற முறையிலும், விஜயகாந்தின் மகன் என்ற முறையிலும் விஜய பிரபாகரன் விடுத்துள்ள அரசியல் எச்சரிக்கை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

“நம்பி மீன் மாதிரி மாட்டிக்காதீங்க”:
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், தவெக தலைவர் விஜய்க்குத் தனது ஆலோசனையை முன்வைத்தார்,

“விஜய் அண்ணா, உங்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ். உங்களுடைய தம்பியாகவும், உங்கள் அண்ணன் விஜயகாந்தின் மகனாகவும் இதைச் சொல்கிறேன். காங்கிரஸ் கட்சி இப்போது உங்களுக்குச் சாதகமாகப் பேசுவது போல் தூண்டில் போடுகிறார்கள். அவர்களின் நோக்கம் உங்களுடன் கூட்டணி சேருவது அல்ல, மாறாக திமுகவிடம் அதிக இடங்களைப் பேரம் பேசுவதற்காக உங்களைப் பயன்படுத்துகிறார்கள். அந்தத் தூண்டிலில் மீன் மாதிரி நம்பி மாட்டிக்கொள்ளாதீர்கள்.”

உசுப்பேற்றும் காங்கிரஸ்:
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விஜய்யின் அரசியல் நகர்வுகளைப் பாராட்டுவதும், விஜய்யின் படங்களுக்குச் சென்சார் போர்டில் பிரச்சனை வரும்போது அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதும் வெறும் அரசியல் நாடகம் என விஜய பிரபாகரன் விமர்சித்துள்ளார்.

“உங்களை உசுப்பேற்றித் தனித்து விடவும் அல்லது அவர்களின் சுய லாபத்திற்காகப் பயன்படுத்தவும் காங்கிரஸ் காத்துக் கொண்டிருக்கிறது. இறுதியில் அவர்கள் இப்போது இருக்கும் இடத்தில்தான் (திமுக கூட்டணி) இருப்பார்கள். நான் சொல்வது உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இதுதான் கசப்பான உண்மை,” என அவர் காரசாரமாகப் பேசினார்.

தனித்திரு.. விழித்திரு.. அறவே தவிர்த்திரு!
காங்கிரஸிடம் இருந்து விஜய் விலகி இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், “விஜய் அண்ணா, காங்கிரஸ் இடமிருந்து தனித்திரு, விழித்திரு, அறவே தவிர்த்திரு” என முழக்கமிட்டார். விஜய்யின் அரசியல் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதைத் தான் கூறுவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

விஜய பிரபாகரனின் இந்தப் பேச்சு காங்கிரஸ் தரப்பிற்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் மகனாக விஜய் மீது கொண்ட பாசத்தால் விஜய பிரபாகரன் இதைக் கூறுகிறாரா அல்லது இது 2026 தேர்தலுக்கான புதிய கூட்டணி மாற்றத்தின் அறிகுறியா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment