மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேலை உறுதித் திட்டமான VB-GRAM G (விக்ஸித் பாரத் கேரண்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் ஆஜீவிகா மிஷன் – கிராமின்) குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தெரிவித்துள்ள கருத்துக்களுக்குத் திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பச்சைப் பொய் சொல்லும் பழனிசாமி:
இது குறித்துத் திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், 100 நாள் வேலைத் திட்டத்தைச் சட்டமாக இருந்தபோதே நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் அலைக்கழித்த பாஜக அரசு, இப்போது 125 நாட்கள் வேலை தரும் என்று சொல்வது அப்பட்டமான பொய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாத மோடி அரசு, இப்போது 1008 நிபந்தனைகளுடன் வரும் புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை தரப்போகிறதா? உண்மையைச் சொன்னால், ஒரு நாள் வேலைக்குக் கூட இனி ஒன்றிய அரசு உத்தரவாதம் கொடுக்கவில்லை,” எனத் திமுக சாடியுள்ளது.
டெல்லி ‘ஓனருக்கு’ வலிக்காமல் பேசும் இபிஎஸ்:
“மகாத்மா காந்தி பெயரை நீக்கக் கூடாது என்று உங்கள் டெல்லி ‘ஓனருக்கு’ வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே, அதற்கு என்ன பலன் கிடைத்தது? உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லை” என எடப்பாடி பழனிசாமியை திமுக எள்ளி நகையாடியுள்ளது. மேலும், மாநில அரசின் மீது 40% நிதிச்சுமையை ஏற்றும் பாஜக-வின் எதேச்சாதிகாரத்தை மறைக்க எடப்பாடி பழனிசாமி ‘முட்டு’ கொடுப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை:
யுபிஏ (UPA) ஆட்சியில் வறுமையை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA), தற்போது பாஜக-வால் குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது. இதற்கு வக்காலத்து வாங்குவதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையைத் தானே எழுதிக் கொள்கிறார் எனத் திமுக எச்சரித்துள்ளது.
இந்த விவகாரத்தை முன்னிறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நாளை (டிசம்பர் 24) தமிழகம் தழுவிய பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.