எங்கள் வளங்களை திருட அமெரிக்கா சதி!.. குண்டுவீச்சால் கதிகலங்கிய வெனிசுலா.. போட்டுத் தாக்கும் டிரம்ப் அரசு!

சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மீது அமெரிக்க ராணுவம் இன்று (ஜனவரி 3, 2026) அதிகாலை பயங்கர வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

தலைநகரில் நள்ளிரவு குண்டுவீச்சு:
இன்று அதிகாலை சுமார் 2:00 மணியளவில், கராகஸ் நகரில் தொடர்ச்சியாக 7-க்கும் மேற்பட்ட பெரும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. நகரின் முக்கிய ராணுவத் தளங்களான ஃபூர்டே தியுனா (Fuerte Tiuna) மற்றும் லா கார்லோட்டா (La Carlota) விமானப்படைத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலால் நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, புகை மூட்டம் சூழ்ந்ததால் மக்கள் பீதியில் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

டிரம்ப் ட்வீட் பரபரப்பு:
இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் ஒரு அதிரடியான தகவலை வெளியிட்டுள்ளார். அதில், “அமெரிக்கா வெனிசுலா மற்றும் அதன் தலைவர் நிகோலஸ் மதுரோ மீது மிகப்பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. மதுரோவும் அவரது மனைவியும் பிடிபட்டனர், அவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்,” எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இது குறித்து வெனிசுலா ராணுவம் தரப்பில் இன்னும் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை.

வெனிசுலா அரசின் பதிலடி:
தாக்குதல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே வெனிசுலா அரசு நாடு முழுவதும் அவசர நிலையைப் (National Emergency) பிரகடனம் செய்தது. வெனிசுலா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அமெரிக்காவின் இந்த அத்துமீறிய ராணுவ ஆக்கிரமிப்பை வன்மையாகக் கண்டிக்கிறோம். வெனிசுலாவின் அபரிமிதமான எண்ணெய் வளம் மற்றும் கனிம வளங்களைக் கொள்ளையடிக்கவே அமெரிக்கா இந்தச் சதியைச் செய்துள்ளது. மக்களைத் திரட்டி இந்த ஏகாதிபத்தியத் தாக்குதலை முறியடிப்போம்.” எனத் தெரிவித்துள்ளது.

பின்னணி என்ன?
கடந்த சில மாதங்களாகவே வெனிசுலா எல்லையில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களைக் குவித்து வந்தது. போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதாகக் கூறி, வெனிசுலாவின் பல படகுகளை அமெரிக்கா ஏற்கனவே தாக்கி அழித்திருந்தது. இந்நிலையில், இன்று நேரடியாகத் தலைநகரின் மீது தாக்குதல் நடத்தியிருப்பது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா மற்றும் கியூபா ஆகிய நாடுகள் இந்தத் தாக்குதலைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையைக் கூட்ட வலியுறுத்தியுள்ளன.

Leave a Comment