அமெரிக்காவிற்கு இந்தியத் திறமையால் பெரும் நன்மை..”என் மகனின் பெயர் சேகர்”.. எலான் மஸ்க் நெகிழ்ச்சி..

உலகப் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இந்தியத் திறமைகள் மற்றும் தனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

திறமையான இந்தியர்களால் அமெரிக்கா அடைந்த நன்மைகளை அவர் வெளிப்படையாகப் பாராட்டியதுடன், தனது மகனுக்கு ஒரு புகழ்பெற்ற இந்திய-அமெரிக்க விஞ்ஞானியின் பெயரைச் சூட்டியுள்ள ரகசியத்தையும் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் திறமையான ஊழியர்களுக்கு எப்போதும் தேவை இருந்து கொண்டேதான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கக் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் H-1B விசா நடைமுறைகளில் உள்ள சில குறைபாடுகள் குறித்து அவர் கருத்துத் தெரிவித்தாலும், திறமையாளர்களுக்கு அமெரிக்காவில் எப்போதும் வரவேற்பு இருக்கும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

தனது சொந்த வாழ்க்கையிலும் இந்தியப் பூர்வீகத்தின் தொடர்பு உள்ளது என்பதையும் வெளிப்படுத்தினார்.
அவர் தனது வாழ்க்கைத் துணையான ஷிவோன் ஜிலிஸ் (Shivon Zilis) குறித்துப் பேசுகையில், “என் வாழ்க்கைத் துணை ஷிவோன் ஜிலிஸ் கூட பாதி இந்தியர் தான். அவர் கனடாவில் வளர்ந்தாலும், குழந்தையிலேயே தத்து கொடுக்கப்பட்டவர். கனடாவில் வளர்ந்திருந்தாலும், ஷிவோன் ஜிலிஸுக்கு இந்திய வம்சாவளிப் பின்னணி இருப்பதை எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார்.

தனது மகன்களில் ஒருவருக்கு நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகரின் நினைவாகப் பெயர் சூட்டியுள்ளதை எலான் மஸ்க் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
“நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்கர் சுப்ரமணியன் சந்திரசேகரின் நினைவாக என் மகனின் பெயரில் ஒரு பகுதிக்கு ‘சேகர்’ என சூட்டியுள்ளேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

சுப்ரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar):

இவர் 1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற புகழ்பெற்றவர் ஆவார். விண்மீன்களின் அமைப்பு மற்றும் பரிணாமம் பற்றிய இவரது கோட்பாட்டு ஆய்வுகள் உலகளவில் இன்றும் போற்றப்படுகின்றன.

ஒரு உலகப் பெரும் தொழிலதிபர் தனது மகனுக்கு ஒரு இந்திய விஞ்ஞானியின் பெயரால் ‘சேகர்’ எனச் சூட்டியிருப்பது, சர்வதேச அளவில் இந்தியர்களின் அறிவியல் மற்றும் அறிவுசார் பங்களிப்புகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Comment