அணு ஆயுதப் போர் மேகங்கள்: 24 மணிநேரத்தில் 7,000 கோடி செலவு செய்த அமெரிக்கா! கலக்கத்தில் உலக நாடுகள்!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூழத் தொடங்கியுள்ளன. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த சில நாட்களாக ஈரான் மீது கடுமையானத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன.

நிர்மூலமான கட்டிடங்கள்.. 600 பேர் பலி!
ஈரானின் தலைநகரான தெஹ்ரானை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், அங்குள்ள பல முக்கியக் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இந்தத் துரதிர்ஷ்டவசமான போரில் இதுவரை ஈரானைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிலடி கொடுக்கும் ஈரான் – ஸ்தம்பித்த வளைகுடா நாடுகள்:

தனது நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக, பாதுகாப்பு கருதி வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதியிலேயே தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

24 மணிநேரத்தில் ரூ.7,183 கோடி செலவு!

இந்தப் போருக்காகச் சம்பந்தப்பட்ட நாடுகள் கற்பனை செய்ய முடியாத அளவிற்குப் பணத்தை வாரி இறைத்து வருகின்றன. குறிப்பாக, ஈரான் மீது தாக்குதல் நடத்திய முதல் 24 மணிநேரத்தில் மட்டும் அமெரிக்கா சுமார் 7,183 கோடி ரூபாயைச் செலவிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. போரில் பயன்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்கள், ஏவுகணைகள் மற்றும் ராணுவத் தளவாடங்களை இடமாற்றம் செய்வதற்காகவே இந்த பிரமாண்டத் தொகை செலவாகியுள்ளது.

3-ம் உலகப்போர் அச்சம்:
வளைகுடா நாடுகளில் நிலவும் இந்த அசாதாரண சூழல், இது மூன்றாவது உலகப்போராக (World War 3) மாறிவிடுமோ என்கிற அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் சர்வதேச வர்த்தகப் பாதிப்பு எனப் பொருளாதார ரீதியாகவும் உலகம் பெரும் சவாலைச் சந்திக்க நேரிடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave a Comment