ஜனநாயகன்’ டீமுக்கு விழுந்த பலத்த அடி… சென்சார் இல்லை..இனி என்ன நடக்கும்?

நடிகர் விஜய்யின் கடைசி படமாக எதிர்பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பாக ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, தலைமை நீதிபதி அமர்வு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

என்ன நடந்தது? – பின்னணி:
‘ஜனநாயகன்’ படத்தை பொங்கல் வெளியீடாக ஜனவரி 9-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், தணிக்கை வாரியம் (CBFC) படத்திற்கு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்தது. இதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, “படத்திற்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும்” என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

சென்சார் போர்டு மேல்முறையீடு:
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. “மறுஆய்வுக் குழுவின் முடிவுக்கு முன்பே சான்றிதழ் வழங்க உத்தரவிடுவது விதிகளுக்கு எதிரானது” என்று வாதிடப்பட்டது.

தலைமை நீதிபதியின் அதிரடி தீர்ப்பு:
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கியது. அதில்,

தணிக்கை வாரியம் தனது வாதங்களை முன்வைக்க போதிய அவகாசம் அளிக்காமல் தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். சட்ட விதிகளின்படி தணிக்கை வாரியத்தின் நடைமுறைகளில் நீதிமன்றம் உடனடியாகத் தலையிட முடியாது. எனவே, படத்திற்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்?
இந்தத் தீர்ப்பின் மூலம் படத்தின் ரிலீஸ் தேதி மேலும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதாக மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்த ‘செக்’ படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment