மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் (NCP) தலைவருமான அஜித் பவார் பயணம் செய்த தனி விமானம், இன்று காலை புணே மாவட்டத்தின் பாராமதி அருகே விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் அஜித் பவார் உட்பட விமானத்தில் இருந்த 5 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்தது எப்படி?
மும்பையில் இருந்து காலை 8.10 மணியளவில் பாராமதி நோக்கிப் புறப்பட்ட ‘Learjet 45’ ரக சிறிய விமானம், காலை 8.45 மணியளவில் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தது. அப்போது மோசமான வானிலை மற்றும் குறைவான பார்வைத்திறன் (Low Visibility) காரணமாக விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.
நேரில் பார்த்தவர்களின் பகீர் வாக்குமூலம்:
இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில்,
“விமானம் தரையிறங்கும்போது ஒருவிதமான சத்தத்துடன் அங்கும் இங்குமாக அலைபாய்ந்தது. திடீரென 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது. விழுந்த அடுத்த சில நொடிகளில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. சுமார் 4 முதல் 5 முறை பயங்கர சத்தத்துடன் விமானம் வெடித்துச் சிதறியது. உள்ளே இருந்தவர்களை மீட்க நாங்கள் ஓடினோம், ஆனால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் யாரையும் நெருங்கக்கூட முடியவில்லை” எனத் திகிலுடன் தெரிவித்தார்.
பலி எண்ணிக்கை:
அஜித் பவார், அவரது பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 5 பேரும் விபத்தில் பலியாகினர்.
அடையாளம்:
விபத்தின் தீவிரம் காரணமாக உடல்கள் கருகிய நிலையில் இருந்தன. அஜித் பவாரின் உடல் அவர் அணிந்திருந்த கைக்கடிகாரத்தை வைத்து அடையாளம் காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு துக்கம்:
இந்த அதிர்ச்சியான செய்தியைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 3 நாட்கள் அரசு துக்கம் கடைபிடிக்கப்படும் என முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
காரணம்:
முதற்கட்ட விசாரணையில் மோசமான வானிலையே விபத்துக்குக் காரணம் எனத் தெரிந்தாலும், விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இந்த உயிரிழப்புக்குத் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அஜித் பவாரின் மறைவு மகாராஷ்டிரா அரசியலில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.