தமிழகத்தில் நீண்டகாலமாகக் கூட்டணியில் இருக்கும் திமுகவை, “காங்கிரஸ் இல்லையென்றால் நீங்கள் எதிர்க்கட்சிதான்” எனச் சொல்லி திருச்சி வேலுசாமி அதிர வைத்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்வில் பேசிய அவர், திராவிட ஆட்சி மற்றும் தற்போதைய தமிழக நிலை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள் :
தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து வேதனை தெரிவித்த அவர், “தமிழ்நாட்டு மக்கள் இன்று செத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நினைத்துப் பார்த்தாலே பயங்கரமாக இருக்கிறது. ஒரு உண்மையான காங்கிரஸ்காரன் என்பவன் மக்கள் நலனுக்காகச் சொந்தக் கட்சியிலேயே தவறு நடந்தாலும் அதைக் கேட்கக்கூடிய துணிச்சல் கொண்டவனாக இருக்க வேண்டும்,” என்றார்.
காமராஜரின் வரலாற்றுச் சாதனை:
திராவிட இயக்கங்கள் பேசும் சமூக நீதியை விமர்சித்த அவர், ஒரு வரலாற்றுச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார்.
“1954-ல் கோயில் கர்ப்பகிரகத்திற்குள் மற்றவர்கள் நுழையக்கூடாது என்று சொன்னபோது, அதற்குப் பதிலடியாகப் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரை அறநிலையத்துறை அமைச்சராக மாற்றிக் காட்டினார் பெருந்தலைவர் காமராஜர். அந்தத் தெம்பு, திராணி, ஆண்மை அவருக்கு இருந்தது. கடந்த 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் இதேபோலச் செய்ய யாருக்காவது துணிச்சல் இருந்ததா?” என ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பினார்.
திமுகவிற்கு நேரடி எச்சரிக்கை:
திமுகவின் தற்போதைய பலம் குறித்துப் பேசிய திருச்சி வேலுசாமி, “நான் இப்பொழுதும் சொல்கிறேன், காங்கிரஸ் இருந்தால் மட்டுமே திமுக ஆட்சியில் இருக்க முடியும். காங்கிரஸ் இல்லையென்றால் திமுக வெறும் எதிர்க்கட்சிதான். இதை நான் திமுகவைப் பார்த்தே சொல்கிறேன்,” என்று பகிரங்கமாகத் தெரிவித்தார்.
கூட்டணிக் கட்சியாக இருந்துகொண்டே திமுகவின் அஸ்திவாரத்தைச் சீண்டும் வகையில் திருச்சி வேலுசாமி பேசியிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.