சமீபத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த பிரபல பேச்சாளரும், அரசியல் விமர்சகருமான நாஞ்சில் சம்பத், அக்கட்சியின் தலைவர் விஜய்யின் அரசியல் வியூகம் குறித்துப் பரபரப்பான பேட்டி அளித்துள்ளார்.
பாஜகவுடன் விஜய் இணக்கத்துடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே என்று தான் விஜய்யிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு விஜய் அளித்த பதில் குறித்து நாஞ்சில் சம்பத் வெளிப்படுத்தியுள்ளார்.
தேர்தல் முடிந்ததும் அடுத்த குறி பாஜகதான் :
தற்போது தமிழகத்தில் தேர்தல் நடைபெறவிருப்பதால், அதிகாரத்தில் உள்ள மாநில அரசை முழுமையாக விமர்சித்து வருவதாகவும், பாஜக குறித்து அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் விஜய் தெரிவித்ததாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
“பாஜகவுடன் இணக்கமாக இருப்பதாக சொல்கிறார்களே என விஜயிடம் கேட்டேன். அப்படியெல்லாம் இல்லை. தேர்தல் இங்கு நடக்கவிருப்பதால், அதிகாரத்தில் இருக்கும் கட்சியை முழுமையாக விமர்சிக்கிறேன். பாஜகவை பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று பதில் கூறினார்,” என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
விஜய் பாஜகவுக்கு எதிராக நேரடியாகக் கருத்து தெரிவிக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணமா என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்தத் தகவல், தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்கால அரசியல் இலக்கு மற்றும் அணுகுமுறையை உணர்த்தும் விதமாக உள்ளது.