தமிழக அரசியலில் கடந்த ஓராண்டாக நீடித்து வந்த மிகப்பெரிய ‘கூட்டணிப் போர்’ இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் இன்று நடைபெற்ற முக்கிய ஆலோசனையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை இணைப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஓராண்டு கால பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி:
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை எக்காரணம் கொண்டும் மீண்டும் சேர்க்கவோ அல்லது அவர்களைக் கூட்டணியில் இணைக்கவோ மாட்டேன் என்பதில் எடப்பாடி பழனிசாமி இதுவரை மிக உறுதியாக இருந்தார். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றை எதிர்கொள்ள வலுவான கூட்டணி அவசியம் என்று பாஜக அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து, தனது நிலைப்பாட்டை எடப்பாடி தளர்த்தியுள்ளதாகத் தெரிகிறது.
யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?
(3 + 6 Formula) நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, முதற்கட்டமாகத் தொகுதிகள் குறித்த கணக்குகள் இறுதி செய்யப்பட்டுள்ளன, ஓ. பன்னீர்செல்வம் அணி: 3 தொகுதிகள்
டிடிவி தினகரன் (அமமுக): 6 தொகுதிகள், பாஜக: சுமார் 30 முதல் 40 தொகுதிகள் வரை (அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதால் பேச்சுவார்த்தை தொடர்கிறது).
பியூஷ் கோயலின் மாஸ்டர் மூவ்:
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியபோது,
“வாக்குகள் சிதறுவது திமுக-விற்கே சாதகமாக முடியும். எனவே, பழைய கசப்புகளை மறந்து அனைவரும் ஒரே குடையின் கீழ் வர வேண்டும்,” என்ற பாஜக மேலிடத்தின் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதற்கு எடப்பாடி பழனிசாமி சில நிபந்தனைகளுடன் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் அறிவிப்பு:
இந்தச் சமரசத்தின் மூலம் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி வலுவடைந்துள்ளது. விரைவில் டெல்லியில் பாஜக தேசியத் தலைவர்கள் முன்னிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றித் தங்களது மெகா கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.