தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டை முறைப்படி செயல்படுத்தக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில அரசுக்கு சவால் விடுக்கும் வகையிலும், அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் வகையிலும் மிகக் காட்டமான உரையை ஆற்றியுள்ளார்.
அவர் தனது உரையில், இட ஒதுக்கீடு என்பது அரசியல் ஆதாயம் தேடும் விஷயம் அல்ல என்று வலியுறுத்திப் பேசினார்.
324 சமுதாயங்களுக்கும் சம நீதி :
வன்னியர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள 324 சமுதாயங்களும் வளர வேண்டும் என்பதே பா.ம.க.வின் உண்மையான நோக்கம் என்று அவர் வலியுறுத்தினார்.
“அனைத்து சமுதாய மக்களும் படிக்க வேண்டும், வளர வேண்டும் என வலியுறுத்துகிறேன். அனைத்து சமூக மக்களும் நலமாக வாழ வேண்டும்.” “இட ஒதுக்கீடு என்பது மக்களுக்குச் சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது போன்றது.”
வேஷம் போடுபவர்கள் அல்ல :
அரசியலில் ‘வேஷம்’ போடும் கட்சிகளை மறைமுகமாகத் தாக்கிய ராமதாஸ், தங்கள் கட்சி நேர்மையாக இயங்குவதாகக் கூறினார். “பா.ம.க. ஒன்றுதான். அது, இது என எதையோ சொல்லி ஏமாற்றினாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள். நாங்கள் வேஷம் போடுபவர்கள் அல்ல, எங்களுக்கு வேஷம் போடவும் தெரியாது.”
முதல்வருக்கு நேரடி சவால் :
இறுதியாக, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரடியான சவால் விடுக்கும் வகையில் அவர் பேசினார். “இருக்கும் ஆவணங்களை வைத்து இட ஒதுக்கீட்டை சரியாகப் பகிர்ந்து வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் முறையாக கணக்கீடு செய்து இட ஒதுக்கீடு தந்தால் அதன் பெருமை முதல்வருக்குக் கிடைக்கும்” என்று ராமதாஸ் வலியுறுத்தினார்.
சமீபகாலமாக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இட ஒதுக்கீட்டுப் பங்கீடு குறித்து விவாதங்கள் வலுத்து வரும் நிலையில், ராமதாஸின் இந்த உரை அரசியல் அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.