அமெரிக்கா மற்றும் டென்மார்க் இடையே கிரீன்லாந்து (Greenland) தீவைக் கைப்பற்றுவது தொடர்பாகப் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் விடுத்துள்ள அறிக்கை சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ உடையும் – டொனால்ட் டஸ்க் வார்னிங்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேசியப் பாதுகாப்பு காரணங்களுக்காகக் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் எனத் தீவிரமாகத் துடித்து வருகிறார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வார்சாவில் செய்தியாளர்களைச் சந்தித்த போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் கூறியதாவது,
“நேட்டோ (NATO) அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஒரு நாட்டின் பகுதியை, அதே அமைப்பில் உள்ள மற்றொரு வல்லரசான அமெரிக்கா ஆக்கிரமிக்க முயன்றால், அதுவே ‘நாம் அறிந்த உலகின் முடிவாக’ (End of the world as we know it) இருக்கும். இது நேட்டோ அமைப்பின் அடிப்படையையே தகர்த்து, மிகப்பெரிய அரசியல் பேரழிவை ஏற்படுத்தும்.”
அமெரிக்காவிற்கு செக் வைத்த போலந்து:
ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையை வலியுறுத்திய டொனால்ட் டஸ்க், “டென்மார்க் மற்றும் கிரீன்லாந்திற்கு ஆதரவாக போலந்து தன்னால் முடிந்த அனைத்து இராஜதந்திர உதவிகளையும் செய்யும். நேட்டோ என்பது ‘ஒருவருக்காக அனைவரும்’ (One for all) என்ற தத்துவத்தில் இயங்குவது. அந்த ஒற்றுமையைச் சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க முடியாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
படை அனுப்பும் திட்டம் இல்லை:
பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் ஏற்கனவே அடையாள ரீதியாகத் தங்கள் ராணுவ வீரர்களைக் கிரீன்லாந்திற்கு அனுப்பத் தொடங்கியுள்ளன. ஆனால், போலந்து பிரதமர் இது குறித்துக் கூறுகையில், “டென்மார்க்கிற்கு எங்களின் முழு ஆதரவு உண்டு. இருப்பினும், கிரீன்லாந்துப் பகுதிக்கு இப்போதைக்குத் தனது நாட்டுப் படைகளை அனுப்பும் திட்டம் போலந்திடம் இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.