ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை காலி.. மும்பை தேர்தல் மை விவகாரத்தில் ராகுல் காந்தி கடும் அட்டாக்!

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பணக்கார மாநகராட்சியான மும்பை மாநகராட்சி தேர்தலில் (BMC), வாக்காளர்களுக்கு வைக்கப்பட்ட மை எளிதில் அழிந்த விவகாரம் தேசத்தையே உலுக்கியுள்ளது. இது குறித்துப் பேசியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “வாக்குத்திருட்டு என்பது தேசவிரோத செயல்” எனத் தேர்தல் ஆணையத்தின் முகத்திரையைக் கிழித்துள்ளார்.

மும்பையில் ‘மை’ மாயம்!
நேற்று (ஜனவரி 15) மும்பை முழுவதும் உள்ள 227 வார்டுகளில் மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது, வாக்காளர்களின் விரலில் வழக்கமாக வைக்கப்படும் அழியா மைக்கு பதிலாக, இம்முறை ‘மார்க்கர் பென்’ (Marker Pen) போன்ற மை பயன்படுத்தப்பட்டது.

வாக்களித்துவிட்டு வெளியே வந்தவர்கள் சானிடைசர் அல்லது நெயில் பாலிஷ் ரிமூவர் மூலம் அந்த மையைத் துடைத்தபோது, அது சில நொடிகளில் மறைந்துவிட்டது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவ, “இது போலி வாக்களிப்புக்கு வழிவகுக்கும்” என உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர்.

ராகுல் காந்தி அட்டாக்:
இன்று காலை தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கிய நிலையில், இந்த மை விவகாரம் குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமாகப் பதிவிட்டுள்ளார்.

வாக்குத்திருட்டு தேசவிரோதம்:
“வாக்குத்திருட்டு (Vote Chori) என்பது சாதாரண அரசியல் மோதல் அல்ல, அது தேசவிரோத செயல்” என ராகுல் கடுமையாகச் சாடியுள்ளார்.

மக்களை ஏமாற்றும் ஆணையம்:
“தேர்தல் ஆணையம் உண்மைகளை மறைத்து குடிமக்களைத் தவறாக வழிநடத்துகிறது (Gaslighting). இதனால் நமது ஜனநாயகத்தின் மீதான அடிப்படை நம்பிக்கையே தகர்ந்துவிட்டது” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனநாயகப் படுகொலை:
உழைத்துச் சம்பாதிக்கும் மக்களின் வாக்குகளை இத்தகைய குளறுபடிகள் மூலம் சிதைப்பது மிகப்பெரிய துரோகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் விசாரணை:
ஆரம்பத்தில் இந்தப் புகாரை நிராகரித்த மாநிலத் தேர்தல் ஆணையர் தினேஷ் வாக்மரே, எதிர்க்கட்சிகளின் கடுமையான அழுத்தத்திற்குப் பிறகு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

புகார்கள் வந்த வாக்குச்சாவடிகளில் இருந்து மார்க்கர் பேனாக்கள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மையை வழங்கிய நிறுவனத்திடம் (Kores India) விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இனிவரும் தேர்தல்களில் இத்தகைய மார்க்கர் பேனாக்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும், மை பாட்டில்களே பயன்படுத்தப்படும் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது.

அரசியல் பரபரப்பு:
“தோல்வி பயத்தில் ராகுல் காந்தி முன்னரே சாக்குப்போக்கு சொல்கிறார்” என பா.ஜ.க தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Leave a Comment