நான் தான் தலைவர்.. பாமகவை யாரும் உரிமை கொண்டாட முடியாது.. அன்புமணிக்கு ராமதாஸ் தந்த அதிர்ச்சி வைத்தியம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது, கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அனல் பறக்கும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். “என்னைப் பற்றிப் பேச அன்புமணிக்கு எந்த உரிமையும் கிடையாது. இனி என் பெயர், பட்டத்தை அன்புமணி பயன்படுத்தக்கூடாது. அதற்கு அவருக்கு உரிமை இல்லை” என்று அறிவித்து, தந்தை-மகன் உறவுக்கு அப்பாற்பட்ட உச்சக்கட்ட அரசியல் பிளவை வெளிப்படுத்தியுள்ளார்.

தந்தை இராமதாஸின் ஆவேச அறிவிப்பு :

அண்மையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், “பாமக குழப்பத்திற்கு திமுகதான் காரணம், ஐயா (ராமதாஸ்) குழந்தை மாதிரி மாறிவிட்டார்” என்று அன்புமணி பேசியதற்குப் பதிலளிக்கும் விதமாக, இராமதாஸ் இந்தக் கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மருத்துவர் இராமதாஸ் தமது அறிக்கையில், “கட்சி எனக்கில்லை என்று சொல்வதற்கு ஒரு பிள்ளைக்கு எந்த உரிமையும் கிடையாது. இனி என் பெயர், பட்டத்தை அன்புமணி பயன்படுத்தக்கூடாது. அதற்கு அவருக்கு உரிமை இல்லை. வேண்டுமென்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளட்டும். நான் உருவாக்கிய பாமகவை அன்புமணி உள்ளிட்ட யாரும் உரிமை கொண்டாட முடியாது. நான் தான் பாமகவிற்கு நிறுவனர், தலைவர்” என்று அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.

அன்புமணிக்கு எதிரான சட்ட நடவடிக்கை :

உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இராமதாஸ் தரப்பு பாமகவின் தலைவர் பதவி குறித்துத் தேர்தல் ஆணையத்தில் அன்புமணி சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்று குற்றம் சாட்டி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. அண்மையில் இந்த வழக்கில், அன்புமணியை கட்சியின் தலைவர் என்று அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியதாக மருத்துவர் இராமதாஸ் தரப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இராமதாஸ் தரப்பில் அன்புமணி மீது தேர்தல் ஆணையத்தில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகக் கூறி, டெல்லி காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், உட்கட்சி மோதலுக்கு திமுக சூழ்ச்சி என்றும், தமது தந்தை ராமதாஸ் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்றும் நிர்வாகிகளிடம் குற்றம் சாட்டினார். அதற்குப் பதிலடியாக, நிறுவனர் இராமதாஸ், அன்புமணியின் அரசியல் உரிமையை மறுத்து, தமது பெயரையோ, கட்சிப் பட்டத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளார்.

பாமகவின் எதிர்காலம், தலைமைப் பதவி, கட்சியின் சொத்துக்கள் ஆகியவை குறித்த குழப்பங்களுக்கு இந்த அறிக்கை மேலும் வலு சேர்த்துள்ளது. இந்த வெளிப்படையான மோதல் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment