கிரீன்லாந்து பக்கம் கை வைக்காதீங்க.. அமெரிக்காவை வறுத்தெடுத்த ரஷ்யா..

கிரீன்லாந்து தீவு டென்மார்க் நாட்டுக்குச் சொந்தமானது என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகை அதிரடியாக அறிவித்துள்ளது.

சமீபகாலமாக, கிரீன்லாந்து தீவை எப்படியாவது அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். “நாங்கள் கிரீன்லாந்தை வாங்காவிட்டால், ரஷ்யாவோ அல்லது சீனாவோ அதைக் கைப்பற்றிவிடும். இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்து” என்று ட்ரம்ப் கூறி வருகிறார்.

ரஷ்யா நக்கல்:
ட்ரம்ப்பின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம், “கிரீன்லாந்தைச் சுற்றி பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகச் சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதை. அங்கு சாதாரணமான சூழல்தான் நிலவுகிறது. இல்லாத ஒரு எதிரியைக் காட்டி, ஒரு நாட்டை அபகரிக்கப் பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது” என்று விமர்சித்துள்ளது.

இரட்டை வேடம் அம்பலம்:
இந்த விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் மற்றும் நேட்டோ (NATO) அமைப்பின் இரட்டை வேடம் வெளிப்படுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்யாவின் வாதம்:
“சர்வதேச சட்டங்களைப் பேசுபவர்கள், இப்போது ஒரு நாட்டின் தன்னாட்சி பகுதியை விலைக்கு வாங்கவோ அல்லது வலுக்கட்டாயமாக இணைக்கவோ துடிப்பது ஏன்? இதுதான் உங்கள் ‘விதிமுறை சார்ந்த உலக ஒழுங்கா’?” என்று ரஷ்ய செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி அதிகாரத்திற்கு உட்பட்டது. இங்குள்ள அபரிமிதமான கனிம வளங்கள் மற்றும் ஆர்க்டிக் பகுதியின் ராணுவ முக்கியத்துவம் காரணமாக அமெரிக்கா இந்தத் தீவின் மீது கண் வைத்துள்ளது.

தற்போது பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் டென்மார்க்கிற்கு ஆதரவாக சிறிய அளவில் ராணுவத்தை கிரீன்லாந்துக்கு அனுப்பியுள்ளன. இந்நிலையில், ரஷ்யா “நாங்கள் கிரீன்லாந்து மீது உரிமை கோரவில்லை, அது டென்மார்க்கிற்கே சொந்தம்” என அறிவித்திருப்பது அமெரிக்காவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment