இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதில் கூடங்குளம் அணுமின் நிலையம் முக்கியப் பங்கு வகிக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா-ரஷ்யா இடையேயான நீண்டகால ஒத்துழைப்பின் அடையாளமாக இந்தத் திட்டம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புடின் அறிக்கை:
கூடங்குளத்தில் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்ட அதிபர் புடின், கூடங்குளத்தில் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தைக் கட்டும் திட்டத்தை ரஷ்யா செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
“கூடங்குளத்தில் அமையவிருக்கும் ஆறு அணுமின் நிலையங்களில், இரண்டு அணு உலைகள் ஏற்கனவே மின் கட்டமைப்புடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள அணுமின் நிலையங்களை முழுத் திறனுக்குக் கொண்டு வருவது, இந்தியாவின் அதிகரித்துவரும் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதில் கணிசமான பங்களிப்பைச் செய்யும்,” என்று அவர் கூறினார்.
கூட்டுக் கட்டுமானம்:
கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 6,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மின் உற்பத்தி செய்து வரும் இரண்டு உலைகளைத் தொடர்ந்து, மற்ற நான்கு உலைகளின் கட்டுமானப் பணிகளும் வெவ்வேறு நிலைகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த அணுமின் நிலையங்கள் முழுத் திறனில் இயங்கத் தொடங்கும்போது, தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் மின் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் இவை மிக முக்கியமான பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




