கிரிக்கெட் உலகில் தற்போது டி20 போட்டிகளுக்கே மவுசு அதிகம். ஆனால், பாரம்பரிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னும் 50 ஓவர் போட்டிகள் தான் ‘ரியல் கிரிக்கெட்’. அந்த வரிசையில், முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் டி20 உலகக்கோப்பை குறித்து முன்வைத்துள்ள ஒரு அதிரடி கருத்து இப்போது சர்ச்சையாகியுள்ளது.
50 ஓவர் தான் ‘கெத்து’!
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், உலகக்கோப்பை என்ற சொல்லுக்கான மரியாதையை மீட்டெடுக்க வேண்டும் என வாதிட்டார். அவர் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட் உலகக்கோப்பை என்றாலே அது 50 ஓவர் உலகக்கோப்பை மட்டும்தான். 4ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அந்தத் தொடருக்குத் தான் அந்த உன்னதமான பெயர் பொருந்தும்” எனத் தெரிவித்தார்.
டி20-க்கு அந்த அந்தஸ்து வேணாம்!
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் டி20 தொடர்களை உலகக்கோப்பை என்று அழைப்பதை மஞ்ச்ரேக்கரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் டி20 வெர்ஷனுக்கு ‘உலகக்கோப்பை’ (World Cup) என்ற அந்தஸ்தைத் தரக்கூடாது. அதற்குப் பதிலாக அதை ‘The World T20’ என்று அழைப்பதே சரியாக இருக்கும்” என அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
மஞ்ச்ரேக்கர் சொல்லும் காரணம் என்ன?
50 ஓவர் உலகக்கோப்பை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதால், அதற்காகக் காத்திருக்கும் தவிப்பும், அந்தத் தொடரின் மதிப்பும் அதிகம். 50 ஓவர் கிரிக்கெட் என்பது வீரர்களின் பொறுமை மற்றும் திறமையைச் சோதிக்கும் களம். டி20 என்பது அதிரடிக்கானது மட்டுமே. அடிக்கடி உலகக்கோப்பையை நடத்துவதால் அந்தப் பெயருக்கான ‘வெயிட்’ குறைந்துவிடுவதாக அவர் கருதுகிறார்.
ரசிகர்கள் காட்டம்:
மஞ்ச்ரேக்கரின் இந்த கருத்துக்கு டி20 ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “காலம் மாறிவிட்டது, இப்போது டி20 தான் கிரிக்கெட்டை உலகெங்கும் கொண்டு செல்கிறது. அப்படி இருக்கும்போது அதற்கு உலகக்கோப்பை அந்தஸ்து தரக்கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம்?” எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இருப்பினும், கிரிக்கெட்டின் பாரம்பரியத்தைக் காக்க வேண்டும் என நினைக்கும் பழைய ரசிகர்கள் மஞ்ச்ரேக்கரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பிசிசிஐ மற்றும் ஐசிசி தொடர் அட்டவணைகளால் வீரர்கள் திணறி வரும் நிலையில், மஞ்ச்ரேக்கரின் இந்த ‘அந்தஸ்து’ குறித்த பேச்சு மீண்டும் ஒரு விவாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.