பெரியார் பெயரைச் சொல்லி அரசியல் செய்வதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். சமூக நீதி மற்றும் பெண்ணுரிமை தொடர்பாக திமுக முன்வைக்கும் வாதங்களைச் சாடிய அவர், அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
பெரியாரும் சமூக நீதியும்:
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், திமுகவின் ‘திராவிட மாடல்’ மற்றும் சமூக நீதி கொள்கைகளைக் கடுமையாகச் சாடினார். அவர் பேசியதாவது,
“சும்மா சும்மா பெரியார் பெயரைச் சொல்லி அரசியல் செய்யக்கூடாது. அவர்கள் சொல்வது போல பெரியாரின் சமூக நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது என்றால், இன்னும் ஏன் மக்கள் இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்? பெரியார் எந்த சமூக நீதி நிலைநாட்டினார்? அவர் எந்த சமூகத்துக்கும் உண்மையான நீதியை வழங்கவில்லை.”
திமுகவில் பெண்களுக்கு என்ன இடம்?
பெண்ணுரிமை குறித்துப் பேசும் திமுக, தன் கட்சியில் பெண்களுக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவம் என்ன என்று சீமான் கேள்வி எழுப்பினார். பெண்ணுரிமை என்று மேடைகளில் சும்மா பேசிவிட்டு இருக்கக் கூடாது. திமுகவில் பெண்களுக்கு எவ்வளவு முன்னுரிமை கொடுத்திருக்கிறார்கள்?
சட்டமன்றத்தில் எத்தனை பெண் உறுப்பினர்கள் (MLAs) இருக்கிறார்கள்?, அமைச்சரவையில் எத்தனை பெண்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது?, நாடாளுமன்றத்தில் (MPs) திமுக சார்பில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்? இதை அவர்களால் புள்ளிவிவரத்தோடு சொல்ல முடியுமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி உண்டு :
பெண்ணுரிமை குறித்துப் பேசுவதற்குத் தகுதியானவர் யார் என்பது குறித்தும் சீமான் தனது கருத்தைப் பதிவு செய்தார். “இந்தச் சமூகத்தில் பெண்ணுரிமை பேசுவதற்கு ஒரே ஒரு ஆளுக்குத் தான் உரிமை உண்டு. அது எங்கள் தலைவர் மேதகு பிரபாகரனுக்கு மட்டும்தான். ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களை வீரர்களாக மாற்றியவர் அவர் ஒருவரே,” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சீமானின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, திராவிட இயக்கத் தலைவர்கள் மற்றும் திமுக ஆதரவாளர்கள் சீமானின் இந்தக் கருத்திற்குத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.