”தமிழ்நாடு அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயரே காணாமல் போயிருக்கிறது. பெயிண்ட் தீர்ந்துவிட்டதா அல்லது தமிழ்நாடு என்று எழுதினால் கோடிக்கணக்கில் நஷ்டம் வந்துவிடுமா?” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசுப் பேருந்துகளில் அண்மைக்காலமாக ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்பதற்குப் பதிலாக ‘அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்று மட்டுமே எழுதப்படுவதைச் சுட்டிக்காட்டி சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் சிரிப்பையும் சிந்தனையையும் தூண்டியுள்ளது.
திமுக அரசை வாரிய சீமான்:
இது குறித்துச் சீமான் கூறுகையில், “தமிழ்நாட்டில் ஓடும் அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயரைத் தவிர்த்துவிட்டு வெறும் ‘அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்று மட்டும் எழுதியிருப்பது ஏன்? முழுப் பெயரையும் எழுதுவதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம்? ஒருவேளை பெயிண்ட் டப்பா தீர்ந்துவிட்டதா? அல்லது ‘தமிழ்நாடு’ என்று முழுமையாக எழுதினால் போக்குவரத்துத் துறைக்குக் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுவிடுமா?” என்று நக்கலாகக் கேட்டுள்ளார்.
தமிழ்நாடு பெயர் எங்கே?
“மாநில உரிமைகளைப் பற்றிப் பேசும் அரசு, மாநிலத்தின் பெயரையே பேருந்துகளில் போடத் தயங்குவது வேடிக்கையாக இருக்கிறது. இது ஏதோ தெரியாமல் நடந்த விஷயமாகத் தெரியவில்லை. திட்டமிட்டுத் தவிர்க்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது” என அவர் சாடியுள்ளார்.
தமிழ்நாடு என்ற பெயரைத் தூக்கிப்பிடிக்கும் திராவிட மாடல் அரசு, பேருந்துகளில் அந்தப் பெயரை ஏன் சுருக்குகிறது என சீமான் எழுப்பியுள்ள இந்த ‘கலாய்’ கேள்விக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகின்றன.