விசில் அடிச்சா ஓட்டு வராது.. தவெக நிர்வாகிகளுக்கு செங்கோட்டையன் கொடுத்த கிரவுண்ட் லெவல் வார்னிங்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவரும், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் பேசிய விஷயங்கள், அரங்கத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியதோடு பெரும் வைரலாகி வருகிறது.

‘விசில்’ சின்னமும்.. செங்கோட்டையன் அட்வைஸும்!
சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தவெக-விற்கு ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியிருந்தது. இதனால் உற்சாகமடைந்த தொண்டர்கள், மாமல்லபுரம் கூட்டத்திற்கு வந்த விஜய்யை விசில் அடித்து ஆரவாரமாக வரவேற்றனர். இந்தச் சத்தத்தால் ஒருகட்டத்தில் விஜய்யே தனது காதுகளைப் பொத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய செங்கோட்டையன், தொண்டர்களுக்குச் சில நுணுக்கமான தேர்தல் ஆலோசனைகளை வழங்கினார். அவர் கூறியதாவது,

“நமக்கு விசில் சின்னம் கிடைத்துவிட்டது என்பதற்காக எங்கு பார்த்தாலும் விசில் அடித்துக் கொண்டிருக்கக் கூடாது. குறிப்பாக, தூங்கிக் கொண்டிருப்பவர்களின் காதருகே சென்று விசில் அடிக்காதீர்கள். அதேபோல், பேருந்து நிலையங்களில் இருக்கும் வயதானவர்களிடம் விசில் அடிக்காதீர்கள். விசில் சத்தம் கேட்டு பேருந்து கிளம்பிவிட்டது என நினைத்து அவர்கள் அவசரமாக ஏற முயன்று தடுமாறி விழுந்துவிடுவார்கள். அப்படி ஏதும் நடந்தால் நமக்கு வரவேண்டிய வாக்குகள் போய்விடும்!”

சினிமாவில் மட்டுமல்ல.. அரசியலிலும் அவர் ஹீரோ!
விஜய்யைப் புகழ்ந்து பேசிய செங்கோட்டையன், “விஜய் சினிமாவில் மட்டும் ஹீரோ அல்ல, அவர் அரசியலிலும் ஹீரோ தான். தமிழகத்தின் எதிர்கால முதல்வர் அவர்தான் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். எந்தக் கூட்டணியையும் வீழ்த்தக்கூடிய வல்லமை அவருக்கு இருக்கிறது,” என ஆக்ரோஷமாகப் பேசினார்.

அனுபவ அரசியல்:
அதிமுகவில் பல ஆண்டுகாலம் தேர்தல் களங்களைக் கண்ட செங்கோட்டையன், தவெக-வின் இளம் தொண்டர்களுக்கு ‘விசில்’ சின்னத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதைத் தனது பாணியிலேயே நகைச்சுவையாகக் கற்றுக்கொடுத்தது கூட்டத்தில் இருந்தவர்களைக் கவர்ந்தது.

விசில் சின்னம் கிடைத்துள்ள நிலையில், செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களின் இந்த ‘கிரவுண்ட் லெவல்’ ஆலோசனைகள் தவெக தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

Leave a Comment