தமிழகத்தில் பெருகிவரும் போதைப்பொருள் கலாச்சாரம் மற்றும் காவல்துறையினரின் கைகளைக் கட்டிப்போட்டுள்ள அரசியல் தலையீடுகள் குறித்து பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அரசுக்கு புரிதல் இல்லை!
தமிழக அரசின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அண்ணாமலை, அரசுக்கு இந்த விவகாரத்தில் அடிப்படைப் புரிதலே இல்லை எனக் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் கூறியதாவது,
“தமிழ்நாட்டில் கஞ்சாவைக் கட்டுப்படுத்துவோம் என்று சொல்வது சரியான வார்த்தை அல்ல. நாம் ஒட்டுமொத்தப் போதைப்பொருட்களையும் (Drugs) கட்டுப்படுத்த வேண்டும். கஞ்சா என்பது மலைப்பகுதிகளில் விளைவது, அதைத் தடுப்பதற்கு ஒரு வழிமுறை உண்டு. ஆனால், இன்று ‘டார்க் நெட்’ (Dark Net) வழியாக ஆபத்தான போதைப்பொருட்கள் ஆர்டர் செய்யப்படுகின்றன. அவை ஒரு செல்போன் பாக்ஸ் போல பார்சல் செய்யப்பட்டு நேரடியாக மக்களின் வீட்டிற்கே வந்து சேருகின்றன. இதைப் பிடிக்கத் தவறுவது ஏன்?”
‘அடி’ கொடுக்கும் அதிகாரம்!
போதைப்பொருள் விற்பனையாளர்களைக் கையாள்வதில் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பது உதவாது என்று அண்ணாமலை தெரிவித்தார். “காவல்துறைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். போதைப்பொருள் விற்பவர்களைக் கூப்பிட்டு எச்சரிக்கை (Warning) செய்யக்கூடாது. அவர்களை ‘அடித்து வெளுக்க’ வேண்டும். அதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும், அதிகாரத்தையும் அரசாங்கம் வழங்கினால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்று அவர் ஆக்ரோஷமாகத் தெரிவித்தார்.
ஒன்றிய செயலாளர்களின் மிரட்டல் – முடங்கிய போலீஸ்!
காவல்துறையினர் ஏன் போதைப்பொருள் கும்பலைத் துணிச்சலாகப் பிடிக்க முடிவதில்லை என்பதற்கான காரணத்தையும் அவர் அம்பலப்படுத்தினார். அதில்,
“ஒரு போதைப்பொருள் வியாபாரியை போலீஸ் கைது செய்தவுடன், ஆளுங்கட்சியின் ஒன்றிய செயலாளர் வந்து உட்கார்ந்து கொள்கிறார். ‘அவனை விட்டுவிடு, இல்லை என்றால் உன்னைத் தண்ணியில்லா காட்டுக்கு மாற்றிவிடுவேன்’ என்று அதிகாரிகளை மிரட்டுகிறார்கள்.”
முடங்கிய சட்டம்-ஒழுங்கு:
இதனால் காவல்துறை அதிகாரிகள், ‘நமக்கு எதற்கு வம்பு?’ என்று ஒதுங்கிப் போகிறார்கள். காவல்துறையின் கைகளைக் கட்டிப்போட்டு அவர்களை வெறும் ‘பஞ்சாயத்து’ செய்யும் அமைப்பாக இந்த அரசு மாற்றியுள்ளது. சட்டம்-ஒழுங்கை (Law and Order) நிலைநாட்ட அவர்களை இந்த அரசு அனுமதிக்கவில்லை.”
தமிழகத்தில் 95% வழக்குகள் கஞ்சா மீது மட்டுமே போடப்படுகின்றன என்றும், சர்வதேச அளவில் இருந்து வரும் ஆபத்தான போதைப்பொருட்களைத் தடுக்க அரசு தவறிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அண்ணாமலையின் இந்த ‘அடி-வெளுப்பு’ அரசியல் பேச்சு தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.