“திமுகவுக்கு வாக்களிக்காத மக்களிடம் கூட திராவிட மாடல் ஆட்சி நற்பெயரைப் பெற்றுள்ளது. ஆனால், பாஜகவுக்கு வாக்களித்த மக்களே இன்று அந்த அரசைக் கழுவி ஊற்றி வருகிறார்கள்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட அரசு விழாவில், ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றிய முதலமைச்சர், ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகளைச் சாடினார்.
அனைவருக்குமான அரசு:
விழாவில் பேசிய முதலமைச்சர், “தேர்தல் நேரத்தில் எங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடு எங்களிடம் இல்லை. எங்களை எதிர்த்த மக்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் திட்டங்களைத் தீட்டுகிறோம். அதனால்தான், இன்று திமுகவுக்கு வாக்களிக்காத மக்கள் கூட, ‘இந்த ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது’ என்று மனதாரப் பாராட்டுகிறார்கள். இதுதான் திராவிட மாடல் வெற்றியின் அடையாளம்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பாஜக மக்களை வஞ்சிக்கிறது:
”திமுக ஆட்சியின் நற்பெயருக்கு நேர்மாறாக, ஒன்றிய பாஜக அரசு செயல்படுகிறது. பாஜகவை நம்பி வாக்களித்த மக்களே இன்று அந்த அரசைக் கழுவி ஊற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். மக்களுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டு வராமல், வெறுப்புணர்ச்சியைத் தூண்டி அதன் மூலம் அரசியல் லாபம் தேட மட்டுமே பாஜக முயல்கிறது” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டின் மீது வெறுப்பு?
தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் திட்டங்கள் குறித்துத் தவறான தகவல்களைப் பரப்பி, வட மாநிலங்களில் வாக்குகளைப் பெற பாஜக முயற்சிப்பதாகச் சாடிய முதல்வர், “தமிழ்நாட்டின் தனித்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அமித் ஷா முதல் அத்தனை ‘சங்கிப் படைகள்’ வந்தாலும் தமிழ்நாட்டின் உரிமைகளை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்று ஆவேசமாகப் பேசினார்.
திருவண்ணாமலையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே முதல்வரின் இந்தப் பேச்சு பெரும் வரவேற்பைப் பெற்றது. 2026 தேர்தலை முன்னிறுத்தி முதல்வர் ஸ்டாலின் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.