தெரு நாய் கடியால் ஏற்படும் ஒவ்வொரு பாதிப்புக்கும், உயிரிழப்புக்கும் மாநில அரசுகள் தான் பொறுப்பு. இனி பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘ஹெவி’யான நஷ்டஈடு வழங்க உத்தரவிட நேரிடும்” என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது:
தெரு நாய் தொல்லை தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மாநில அரசுகளின் மெத்தனப் போக்கை சரமாரியாகக் கண்டித்தனர்.
“கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு 9 வயதுக் குழந்தையைத் தெரு நாய் கடித்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது? இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்காது” என்று நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்தனர்.
தெரு நாய்களுக்குப் பொது இடங்களில் உணவு வைப்பவர்களையும் (Feeders) நீதிமன்றம் விட்டுவைக்கவில்லை.
“உங்களுக்கு நாய் மீது அவ்வளவு பாசம் இருந்தால், அதை உங்கள் வீட்டிற்குள் வைத்துப் பராமரிக்க வேண்டியதுதானே? ஏன் பொதுமக்களைப் பயமுறுத்தவும், கடிக்கவும் தெருவில் விட வேண்டும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நாய்களுக்கு உணவு அளிப்பவர்களும் இனி கடியால் ஏற்படும் பாதிப்புகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்று நீதிமன்றம் சூசகமாகத் தெரிவித்துள்ளது.
அரசுகளுக்கு விழும் ‘அடி’:
இனி தெரு நாய் கடித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசே பெரும் தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்படும். ‘விலங்கு பிறப்பு கட்டுப்பாடு’ (ABC) விதிகளைச் சரியாக அமல்படுத்தாததே இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
ஐந்து வருஷமா தூங்கிக்கிட்டு இருந்தீங்களா? என மாநில அரசுகளின் செயல்பாட்டை நீதிமன்றம் கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தெரு நாய் தொல்லை தலைவிரித்தாடும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த ‘வார்னிங்’ அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.