நிம்மதியா அரசியல் பண்ணனுமா?.. விஜய்க்கு தமிழிசை கொடுத்த அன்பான‌ வார்னிங்..

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026-ல் 40% வாக்குகள் பெற்று ஆட்சி அமைப்போம் எனத் தீவிரம் காட்டி வரும் வேளையில், அவரை ஒரு ‘பூஜ்ஜியம்’ (Zero) என விமர்சித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி கிளப்பியுள்ளார்.

பூஜ்ஜியத்திற்கு எப்போது மதிப்பு?

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “அரசியலில் தம்பி விஜய்க்கு இன்னும் அனுபவம் போதாது. அவர் ஒரு பூஜ்ஜியம் போன்றவர். பூஜ்ஜியம் தனியாக நின்றால் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. அதுவே முன்னால் ஒரு எண் (வலிமையான கூட்டணி) சேர்ந்தால்தான் அதற்குப் பலம் கிடைக்கும். விஜய் ஒரு வலிமையான கூட்டணியில் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்” என மறைமுகமாக பாஜக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.

திமுக-வும் கரூர் விவகாரமும்:
விஜய்க்கு ஒரு எச்சரிக்கையையும் விடுத்த தமிழிசை, “2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சிக்கு வந்தால் மட்டுமே விஜய் நிம்மதியாக அரசியல் செய்ய முடியும். ஒருவேளை திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தை வைத்து விஜய்யை அவர்கள் விடமாட்டார்கள். அந்தச் சோகமான சம்பவத்தை விஜய் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்” எனப் பரபரப்பைக் கூட்டினார்.

நேரடியாக CM ஆக முடியாது:
திரைத்துறையில் இருந்து வந்தவுடனேயே முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைப்பது கடினம் எனக் குறிப்பிட்ட அவர், வெற்றி பெறும் கூட்டணிக்கு ஆதரவாக விஜய் இருக்க வேண்டும் என்றும், அனுபவம் இல்லாத நேரடி அரசியல் வெற்றிக்கு உத்தரவாதம் தராது என்றும் தனது கணிப்பை முன்வைத்தார்.

Leave a Comment