சென்னை:
தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் சமீபத்திய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளை அவர் நேரடியாகவே சீண்டியுள்ளதாகக் கருதப்படுகிறது.
விசில் வித்தையெல்லாம் இங்க வேலை செய்யாது!
செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “அரசியலில் அதிகாரப் பகிர்வு, ஆட்சியில் பங்கு என்று மேடைக்கு மேடை பேசி, விசில் அடித்துக் கூப்பிட்டாலே எல்லாரும் ஓடி வந்துவிடுவார்கள் என்று யாராவது நினைத்தால் அது தவறு. அப்படி விசில் அடித்துக் கூப்பிட்டு இதுவரை யாரும் அவர்கள் பக்கம் கூட்டணிக்கு போகவில்லை. அதுதான் இன்றைய நிலைமை,” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
திமுக கூட்டணிதான் ‘ஹாட் ஸ்பாட்’!
தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணியின் வலிமையைப் பற்றிப் பெருமிதமாகக் குறிப்பிட்டார். “இன்று பல கட்சிகளும் தானாக முன்வந்து தேடி வருவது திமுக கூட்டணியைத் தான். ஒரு வலுவான தலைமை, தெளிவான கொள்கை எங்கே இருக்கிறதோ, அங்கேதான் கட்சிகள் சேரும். அதை விடுத்து, ‘ஆட்சியில் பங்கு தர்றேன்’ என்று ஆசை காட்டுவதால் மட்டும் கூட்டணி அமைந்துவிடாது,” எனத் தனது பாணியில் விளாசினார்.
யாருக்கு குறி?
சமீபத்தில் நடந்த தவெக மாநாட்டில், “தன்னுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படும்” என விஜய் அறிவித்திருந்தார். விஜய்யின் இந்த அறிவிப்பைப் பல கட்சிகளும் உன்னிப்பாகக் கவனித்து வந்த நிலையில், திருமாவளவனின் இந்தப் பேச்சு நேரடியாக விஜய்க்கு வைக்கப்பட்ட ‘செக்’ என்றே அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர்.
பரபரக்கும் அரசியல் களம்!
‘விசில்’ சின்னத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு திருமாவளவன் பேசியிருப்பது, தவெக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “விசில் அடிக்கும் கூட்டத்தை நம்பி அரசியல் இல்லை” என ஏற்கனவே அதிமுக விமர்சித்திருந்த நிலையில், இப்போது விசிக-வும் அதே பாணியில் விமர்சித்திருப்பது 2026 தேர்தலில் புதிய கூட்டணிக் கணக்குகளுக்கு வழிவகுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.