இது திமுக அரசிற்கு தலைகுனிவு!.. ஒடிசா தொழிலாளி தாக்குதல் விவகாரத்தில் ஸ்டாலின் அரசை சாடிய திருமாவளவன்..

சென்னை: திருத்தணி அருகே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை, தற்போதைய சமூகச் சீரழிவைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

ரீல்ஸுக்காக இப்படியா? அநாகரிகத்தின் உச்சம்!
சம்பவம் குறித்துப் பேசிய திருமாவளவன், “ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, அதனை ‘ரீல்ஸ்’ என்னும் பெயரில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் லைக்குகளுக்காகவும், பார்வைகளுக்காகவும் ஒரு சக மனிதனைச் சித்திரவதை செய்யும் இந்த அநாகரிகச் செயல் தமிழ்நாட்டிற்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு எங்கே?
தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களைத் தடுத்திட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த கோரிக்கையில்,

“இத்தகைய கேவலமான போக்குகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். தமிழக அரசு புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இது போன்ற வன்முறை எண்ணம் கொண்டவர்களுக்குச் சட்டம் கடுமையான பாடத்தைப் புகட்ட வேண்டும்” எனத் திருமாவளவன் ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.

சமூகச் சீரழிவிற்கு விசிக கண்டனம்:
சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெருகி வரும் ‘ரீல்ஸ்’ மோகம் மற்றும் வன்முறையைத் தூண்டும் வீடியோக்கள் சமூகத்தைச் சீரழித்து வருவதாகவும், இதனை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் விசிக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஏற்கனவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உரியத் தண்டனை பெற்றுத் தருவதன் மூலமே இத்தகைய அநாகரிகச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனத் திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment