நடிகர் விஜய் பல வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அப்போதே அவர் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடி தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறினார். அதோடு, ஜனநாயகன் படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் ஈடுபடுவேன் எனவும் அவர் அறிக்கை வெளியிட்டார்.
அதன்படி அரசியலுக்கு வந்த விஜய் தொடக்கம் முதலே திமுகவை கடுமையாக விமர்சனம் செய்ய துவங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதை அவரின் குறிக்கோளாக இருக்கிறது. எனவே, பேசும் மேடைகளில் எல்லாம் திமுகவை கடமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
ஆனால் விஜய் பனையூரில் இருந்து மட்டுமே அரசியல் செய்து வருகிறார். களத்தில் இறங்கி அவர் மக்களை சந்திக்கவில்லை என திமுகவினரும், அரசியல் விமர்சகர்களும் சொன்னார்கள். இதைத்தொடர்ந்து மக்களை சந்திக்க முடிவெடுத்த விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்று மக்கள் முன் பிரச்சாரம் செய்ய தொடங்கினார்.

திருச்சி, திருவாரூர் போன்ற மாவட்டங்களுக்கு சென்ற விஜய் அடுத்து நாமக்கல், கரூர் ஆகிய இடங்களுக்கு சென்றார். கரூரில் அவரை பார்க்க பல ஆயிரம் மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 47 பேர் வரை உயிரிழந்தனர். இந்த சம்பவம் விஜயையும், தவெகவினரையும் பலரும் விமர்சிக்க காரணமாக மாறியது.
விஜய் வார இறுதி நாளை தேர்ந்தெடுத்தது தவறு. சனிக்கிழமை என்பதால் அதுவும் 6 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் வேலை முடிந்து பலரும் பக்கத்து கிராமங்களில் இருந்தெல்லாம் கரூரில் அந்த இடத்திற்கு வந்து விட்டார்கள். இதனால்தான் உயிரிழப்பு அதிகமானது என குற்றம் சுமத்தப்பட்டது.
இந்நிலையில்தான் விஜய் மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை துவங்கவிருக்கிறார். டிசம்பர் 4ம் தேதி சேலத்தில் அவர் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டு தவெக சார்பில் மனுவும் அளிக்கப்பட்டிருக்கிறது. சனிக்கிழமை மக்களை சந்திப்பது பிரச்சினையாக மாறியதால் வியாழக்கிழமையை தேர்ந்தெடுத்து மக்களை சந்திக்க முடிவெடுத்திருக்கிறார் விஜய். அதன்படிதான் டிசம்பர் 4ம் தேதியை அவர் தேர்ந்தெடுத்துள்ளார் என்கிறார்கள்.