இன்று காலை தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கோர சம்பவத்திற்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தென்காசி பஸ் விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த மன வேதனை அளிப்பதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அதில்
”தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்”.
”விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.