“அநியாயம் நடக்குது தளபதியே..” பனையூர் தலைமை அலுவலகமே வெடித்தது த.வெ.க போராட்டம்.. ஆதவ் அர்ஜுனா மீது பகீர் குற்றச்சாட்டுகள்..

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைமையகமான சென்னை, பனையூரில், இன்று (டிசம்பர் 14) கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘அநியாயம் நடக்குது தளபதியே!’ என முழக்கமிட்டு, தலைமை அலுவலகத்தின் உள்ளேயே இந்தப் போராட்டத்தை அவர்கள் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்ட செயலாளர் மீது பண மோசடிப் புகார்:
இந்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக, திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மீது சுமத்தப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. கட்சியில் பல்வேறு பதவிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பல நிர்வாகிகளிடம் அவர் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

TVK party workers protest
TVK party workers protest

முழக்கங்கள்:

“மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஒழிக!”, “பணமுதலையே கட்சியை விட்டு வெளியேறு!”, “அநியாயம் நடக்குது தளபதியே! விசாரணை செய்யுங்க தளபதியே!” போன்ற கோஷங்கள் தலைமை அலுவலக வளாகத்தில் எதிரொலித்தன. மேலும், திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன், உள்நோக்கத்துடன் வட்டச் செயலாளர் பிரதீப் என்பவரை கட்சியில் இருந்து நீக்கியதாகவும் தொண்டர்கள் புகார் தெரிவித்தனர்.

பிரதீப், கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பேனர் வைத்த காரணத்திற்காகவே நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உட்கட்சி பூசலின் வெளிப்பாடாக இந்த நீக்கம் பார்க்கப்படுகிறது.

அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு:

இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட த.வெ.க தொண்டர்கள் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தின் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தின் உள்ளேயே முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல், பதவிகளுக்குப் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், தலைமை அலுவலகத்தின் உள்ளேயே இந்தப் போராட்டம் நடைபெற்றிருப்பது, கட்சித் தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment