தமிழகக் கல்லூரி மாணவர்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், புத்தாண்டு விடுமுறை முடிந்தவுடன் மடிக்கணினிகள் (Laptops) வழங்கும் பணி தொடங்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை முதன்மையாகக் கருதுகிறது. அந்த வகையில், வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் உள்ள 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்தியாவிலேயே முதல்முறை இலவச Perplexity Pro AI :
இந்த அறிவிப்பின் சிகரமாக, வழங்கப்படவுள்ள லேப்டாப்புகளில் மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் 6 மாத காலத்திற்கு ‘Perplexity Pro AI’ வசதி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. உலகத்தரம் வாய்ந்த இந்தச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மாணவர்களின் ஆய்வுப் பணிகள் மற்றும் கல்வித் தேடல்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். இதற்காக அமெரிக்காவின் ‘Perplexity AI’ நிறுவனத்துடன் எல்காட் (ELCOT) நிறுவனம் சிறப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிநவீனத் தொழில்நுட்ப வசதிகள்:
வழங்கப்படவுள்ள லேப்டாப்புகள் சாதாரணமானவையாக இல்லாமல், இன்றைய நவீனக் கல்விச் சூழலுக்கு ஏற்ப,
8GB RAM மற்றும் 256GB SSD சேமிப்பு வசதி,நீண்ட நேரம் உழைக்கக்கூடிய அதிநவீன Battery, முன்பே நிறுவப்பட்ட AI மென்பொருட்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் தயாராக உள்ளன.
அரசியல் களத்தில் அதிரடி:
ஏற்கனவே அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் லேப்டாப் விநியோகம் குறித்துக் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், “எதிர்க்கட்சித் தலைவரின் கனவு பலிக்காது; இன்னும் சில வாரங்களில் மாணவர்கள் கைகளில் லேப்டாப் தவழும்” என்று உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் பதிலடி கொடுத்துள்ளார். ஏசர், டெல், மற்றும் எச்.பி ஆகிய முன்னணி நிறுவனங்கள் மூலம் இந்த லேப்டாப்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.