தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் தேர்தல் பரப்புரையின் போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு சுமார் 41 பேர் மரணம் அடைந்தனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. பல எதிர்ப்புகளும் விஜய்க்கு வந்தது. இதனால் தற்காலிகமாக தனது தேர்தல் பரப்புரையை நிறுத்தி வைத்திருந்தார்.
இந்த சம்பவத்திற்கு முழுக்காரணம் திமுக தான் என்று கடுமையான விமர்சனத்தை வைத்தார். இச்சம்பவம் நடந்து சுமார் இரண்டு மாத காலம் நிறைவடைந்து விட்டது. சமீபத்தில் நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்கூட்டத்தில் எனது அரசியல் பயணம் இன்னும் புதிய ஆற்றலுடன் அதிவேகமாக பயணிக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் மீண்டும் தனது தேர்தல் பரப்புரையை விஜய் சேலத்தில் இருந்து ஆரம்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
மேலும் அதற்காக கட்சி நிர்வாகிகளும் முழு வேலைப்பாட்டில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. அதற்காக தவெக சார்பில் சேலம் மாநகர காவலர் ஆணையத்தில் பிரச்சாரத்திற்கு அனுமதி வேண்டி மனு அளித்தார்கள். அதுமட்டுமில்லாமல் கடந்த முறை மாதிரி இம்முறை பெரிய அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க சேலத்திலே பெரிய இடமான போஸ் மைதானம், கோட்டை மைதானம் போன்ற இடங்களை வழங்குமாறு அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதுவும் டிசம்பர் 4 ஆம் தேதி அனுமதி வேண்டுமென்று விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாநகர காவல் ஆணையர் டிசம்பர் 4-ம் தேதி விஜய் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி மறுத்துள்ளார். ஏனென்றால் அன்று கார்த்திகை தீப பணிகள் உள்ளதால் பிரச்சாரத்திற்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது. மேலும் 4-ம் தேதி தவிர மற்ற தேதிகளில் பிரச்சாரம் நடத்த அனுமதி கொடுக்கத் தயார் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.