சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவு. பலரும் இதற்காக நீண்ட நாள் சேமிப்பு, பெரும் தொகையை ஏற்பாடு செய்வது என அதற்கான வேலையை மும்முரமாக பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றனர். சரியான நேரம் வரும் பட்சத்தில் அவரவர் விருப்பம் கட்டாயம் நிறைவேறும் என்று சொல்வார்கள். அந்த வகையில், சொந்த வீடு வாங்கும் கனவு கொண்டவர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும்.
தற்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கி வரும் பல்வேறு வகையான கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கப்பட்டு இருக்கிறது. வட்டிக் குறைப்பு நேற்று (ஜூன் 15) முதல் அமலுக்கு வந்துள்ளது. சமீபத்தில் தான் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதங்களை குறைப்பதாக அறிவித்தது. ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு பின் பல்வேறு வங்கிகள் தங்களது கடன்களுக்கான வட்டியை குறைத்து அறிவித்து வருகின்றன.
ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகித குறைப்புக்கு பிறகு வங்கிகளுக்குள் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக மக்கள் பயன்பெறும் சூழல் உருவாகி இருக்கிறதகு. அந்த வரிசையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் தனது வட்டி விகிதங்களைக் குறைக்கு இருக்கிறது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதனால் தான் பல வங்கிகள் தங்களது கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.
முன்னதாக பேங்க் ஆஃப் பரோடா வங்கியும் இதேபோன்று தனது கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது. வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்து இருப்பதால் மிகக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்கள் கிடைக்கும். இதை பயன்படுத்திக் கொண்டு மக்கள் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
புதிய வட்டி விகிதங்கள்:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் திருத்தப்பட்ட வங்கி விகிதங்களின் படி, வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 7.50 சதவீதம் முதல் 8.45 சதவீதம் வரை இருக்கும். ஒவ்வொருத்தரின் சிபில் மதிப்பெண் அடிப்படையில் வட்டி விகிதங்கள் மாறுபடும். மேக்ஸ்கெயின் ஓடி திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன் வட்டி விகிதம் 7.75 சதவீதத்தில் இருந்து 8.70 சதவீதம் வரை இருக்கும்.
டாப் அப் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதத்தில் தொடங்கி 10.50 சதவீதம் வரை இருக்கும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா EBLR வட்டி விகிதம் 8.65 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக குறைத்துள்ளது. இது புளோட்டிங் விகித வீட்டுக் கடன்கள், சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் கடன்கள் போன்றவற்றின் விகிதங்களை தீர்மானிக்கப் பயன்படுகிறது. இந்த அறிவிப்பு புதிய பயனர்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற வாய்ப்பு அளிக்கிறது.
கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு இருப்பது பற்றி பொதுவான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எனினும், இது கடன் பெறுவோரின் சிபில் ஸ்கோர், கடன் காலம் மற்றும் பிற விஷயங்களை கருத்தில் கொண்டே தீர்மானிக்கப்படும். கடன் பெறுவோர் முன்கூட்டியே சரியான ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.