Cricket
INDvNZ: உடம்பு சரியில்லையாம், பும்ரா இன்றி களமிறங்கிய இந்தியா!
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரை ஏற்கனவே நியூசிலாந்து கைப்பற்றி விட்டது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) துவங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
கடைசி போட்டியில் வெற்றி பெற்று, தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. இந்திய அணி தொடரில் ஒயிட்வாஷ் செய்யப்படுவதை தவிர்க்கும் நோக்கில், இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் இடம்பெற்றிருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ்-க்கு பின் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, “இந்த சீரிசில் நாங்கள் சரியாக விளையாடவில்லை என்பதை புரிந்து கொள்கிறோம். நல்ல பிட்ச் போன்று தெரிகிறது. நாங்கள் முடிந்தவரை குறைந்த ரன்களில் அவர்களை சுருக்குவோம் என்று நம்புகிறோம். எங்களது முழு இலக்கு இந்த டெஸ்ட் போட்டியில் தான் உள்ளது. பும்ராவுக்கு உடல் நிலை சரியில்லை, அவருக்கு பதிலாக சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்,” என்றார்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “திரு. ஜஸ்பிரித் பும்ரா தனது வைரல் சார்ந்த உடல்நலக்குறைவில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. அவர்கள் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான தேர்வில் கலந்து கொள்ளவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளது.