Cricket
அதிர்ஷ்டமே இல்லப்பா.. கோலி விக்கெட்டுக்கு Feel பண்ணும் ரசிகர்கள்..
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரை இழந்த நிலையில், இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆட்டமிழந்தது குறித்து ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று இந்திய அணி 359 எனும் இமாலய இலக்கை துரத்தியது. துவக்கத்திலேயே இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனது விக்கெட்டை பறிக்கொடுக்க, அடுத்து வந்த சுப்மன் கில் 23 ரன்களை சேர்த்து தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
பெரும் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் கோலி ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டு, அணியை மீட்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது, எனினும், 17 ரன்களை எடுத்திருந்த போது, விராட் கோலி எதிர்கொண்ட பந்து அவரது காலில் பட்டது. உடனே எதிரணியினர் எல்.பி.யூ. விக்கெட் கோரினர்.
இதை உற்று நோக்கிய கள அம்பயர் உடனே விராட் கோலிக்கு அவுட் கொடுத்தார். களத்தில் உள்ள அம்பயரின் முடிவில் சந்தேகம் கொண்ட விராட் கோலி உடனே அப்பீல் செய்தார். மூன்றாவது அம்பயர் எல்.பி.யூ. விக்கெட்டை தனது திரையில் சரிபார்த்தார்.
அப்போது, பந்து ஸ்டம்ப்களை இடிக்காமல் இருந்தது தெளிவாக தெரிந்தது. எனினும், மூன்றாவது அம்பயர் விராட் கோலியின் அப்பீல் கோரிக்கைக்கு அம்பயர் முடிவே இறுதியானது என்பதை கூறும் ‘அம்பயர்ஸ் கால்’ முடிவை வழங்கினார்.
இதனால் விராட் கோலி ஏமாற்றத்துடன், முனுமுனுத்தப்படி களத்தில் இருந்து வெளியேறினார். விராட் கோலிக்கும் அம்பயர்ஸ் கால் முடிவுக்கும் அதிர்ஷ்டமே இல்லை என்ற நிலை இன்றும் தொடர்ந்தது.
இதையடுத்து இந்திய அணியின் வெற்றி பறிபோன நிலையில், ரசிகர்கள் விராட் கோலி மிகவும் துரதிஷ்டசாலி என்று கூறி சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சிலர் விராட் கோலிக்கும், அம்பயர்ஸ் கால் விதிக்கும் எப்போதும் ஒற்றுப் போகாது என்றும், வேறு சிலர் விராட் கோலிக்கு கொஞ்சமும் அதிர்ஷ்டமே இல்லை என்றும் கமென்ட் செய்து வருகின்றனர்.