Cricket
103 பந்துகளில் டபுள் செஞ்சுரி.. புது உலக சாதனை.. நியூஸி. பேட்டர் ருத்ர தாண்டவம்..!
நியூசிலாந்து நாட்டின் உள்ளூர் ஒருநாள் போட்டி தொடர்- ஃபோர்டு கோப்பை பெயரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் கேன்டர்பரி மற்றும் ஒடாகோ அணிகள் இடையிலான போட்டியில் நியூசிலாந்து வீரர் புதிய உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
துவக்க வீரரான சாட் போவ்ஸ் லிஸ்ட் ஏ ஆண்கள் கிரிக்கெட்டில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கேன்டர்பரி அணிக்காக களமிறங்கிய நியூசிலாந்து துவக்க வீரர் போவ்ஸ் 103 பந்துகளில் இரட்டை சதம் கடந்து அசத்தினார். துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய போவ்ஸ் 110 பந்துகளில் 205 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் இந்திய விக்கெட்கீப்பர்-பேட்டர் என். ஜெகதீசன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் இணைந்து தக்கவைத்திருந்து அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர்கள் என்ற சாதனையை போப்ஸ் அசால்ட்டாக முறியடித்துள்ளார். மேலும், அதிவேக இரட்டை சதம் அடித்த வீரராக உருவெடுத்துள்ளார்.
முன்னதாக 2022 விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாடிய தமிழக வீரர் என். ஜெகதீசன் அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் 114 பந்துகளில் இரட்டை சதம் கடந்தார். மேலும், இதே போட்டியில் 277 ரன்களை விளாசி மிரட்டினார். அதன்பிறகு 2021-22 மார்ஷ் கோப்பை தொடரில் விளையாடிய ஹெட் 114 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார்.
இதனால், என் ஜெகதீசன் மற்றும் டிராவிஸ் ஹெட் கூட்டாக அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர். அதிரடி இரட்டை சதம் குறித்து பேசிய போவ்ஸ், விரைவில் இந்த சாதனை முறியடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
“அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் இது மூழ்கிவிடும், ஆனால் ஹாக்லேயில் இது மிகவும் சிறப்பான நாளாக அமைந்தது. விசேஷமாக செய்வதற்கு நல்ல தருணமாக அமைந்தது. இவை இயற்கையாக நடக்கக்கூடியவை. இதற்கு திட்டமிடவோ, அல்லது செய்து பார்க்க முயற்சிக்கவோ முடியாது. அந்த வகையில், இது எனக்கான நாளாக அமைந்ததில் மகிழ்ச்சி,” என்று போவ்ஸ் தெரிவித்தார்.