india
ராக்கர்ஸை ரவுண்டப் செய்ய வைத்த ராயன்…இனி நிம்மதி பெருமூச்சு விடுமா திரையுலகம்?…
சினிமா என்பது உலகம் முழுவதும் ஒரு பக்கம் பொழுது போக்கு அம்சமாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் மிகப்பெரிய அளவிலான வியாபாரத்திற்கு காரணியாகவும் இருந்து வருகிறது. லாப, நஷ்டங்களை லட்சம் முதல் கோடி வரை முடிவு செய்யும் வணிக மையமாகவும் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது சினிமாத்துறை.
அதிலும் உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் மூலம் நடக்கும் வணிகம் அதிகமாகவும் இருக்கிறது. வணிக ரீதியல் பார்த்தாலும் திரைத்துறை வருவாய் ஈட்டலில் எப்படி முக்கியமான இடத்தை பிடித்து வருகிறதோ அதே போல தான் வேலை வாய்ப்பு கொடுப்பதிலும். ஒரு திரைப்படம் உருவாகி திரைக்கு வரும் வரை ஒரு சாராருக்கு வேலை வாய்ப்பையும், வருவாயையும் வெளிவந்த பிறகு மற்றொரு தரப்பிற்கும் என தனது பணியை செய்து வருகிறது.
ஆனால் இந்த சினிமா துறைக்கு முக்கியமான பிரச்சனையாக இருந்து வந்தது திருட்டு விசிடிக்கள். மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த பிரச்சனை பெரிதாக தலை தூக்கி விடாமல் முறியடிக்கப்பட்டு விட்டது. ஆண்ட்ராய்ட் அறிமுகத்திற்கு பின்னர் தமிழ்த்திறையுலகத்திற்கு மிகப்பெரிய எதிரியாக இருந்து வந்தது வலைதள திரைப்பட திருட்டு வாசிகள். வெளிவந்த சில நாட்களிலேயே தியேட்டர்களிலிருந்து படங்களை வீடியோ ரெக்கார்ட் செய்து அதனை இன்டர்னெட் வாயிலாக உலகம் முழுவதும் சட்ட விரோதமாக ஒளிபரப்பி வந்தனர்.
அதில் தமிழ் ராக்கர்ஸ் கோடம்பாக்கத்திற்கே பல ஆண்டுகளாக மிகப்பெரிய தலை வலியாக இருந்து வந்தது. இந்நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுர திரையரங்கு ஒன்றில் தனுஷ் நடித்த “ராயன்” படத்தை செல்போன் மூலமாக ரெக்கார்ட் செய்யப்படுவதாக தகவல் வந்தது.
நடிகரும், இயக்குனருமான பிருத்விராஜின் மனைவி சுப்ரியா அளித்த புகாரின் பெயரில் கேரளா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வந்த மதுரையைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஸ்டீபன் ராஜ் தான் “தமிழ் ராக்கர்ஸ்”ன் அட்மின் என்பது தெரிய வந்தது.
தியேட்டர் சீட்களின் அடியில் ஒயர்களை இணைத்து அதன் மூலம் புதுப்படங்களை வீடியோவாக எடுத்து அதன் பின்னர் வலைதளங்களில் வலம் வரச்செய்து வந்திருக்கிறார். ஸ்டீபன் ராஜுடன் சேர்ந்து பன்னிரெண்டு இந்த குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களது இந்த செயலால் திரைத்துறை பெரும் நஷ்டத்தை சில ஆண்டுகளாகவே சந்தித்து வந்தது. இந்த கைது நடவடிக்கைக்கு பின் புதிய திரைப்படங்கள் இனி செல்போன்களிலேயே பார்த்து விடலாம் தியேட்டருக்கே போக வேண்டாம் என்கின்ற அவல நிலை மாற வழியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. கைது செய்யப்பட்ட நபர்களை ஐந்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உள்ளது காவல் துறை.