latest news
முடிச்சு விட்டீங்க போங்க.. பயங்கர அடி வாங்கிய 5ஜி வேகம், ஆய்வில் அதிர்ச்சி..!
இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி நெட்வொர்க் சீராக கிடைக்கிறது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் அதீத முயற்சியால் இது சாத்தியமானது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்தியாவில் 5ஜி வேகம் கணிசமான அளவுக்கு சரிந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 5ஜி நெட்வொர்க் வெளியான நிலையில், தற்போது டேட்டா வேகம் சரிந்துள்ளது கண்டறியப்படுள்ளது.
5ஜி தொழில்நுட்பத்தை வேகமாக பயன்படுத்த துவங்கியது, தினமும் அதிகப்படியான டேட்டா அளவு பயன்படுத்தப்படுவது போன்றவை டேட்டா வேகம் குறைய காரணமாக கூறப்படுகிறது. ஓபன்சிக்னல் வெளியிட்டுள்ள தகவல்களின்படி ஸ்பெக்ட்ரம் நிர்வாகம் மற்றும் பயன்பாடு உள்ளிட்டவை 5ஜி அனுபவம் சிறக்க அத்தியாவசியமானவை ஆகும். 16 சதவீத 5ஜி பயனர்கள் 700MHz பேண்ட் பயன்படுத்துகின்றனர்.
மற்ற 84 சதவீதம் பேர் 3.45GHz பேண்ட் பயன்படுத்துகின்றனர். இந்த பேண்ட் அதிவேக இணைய வசதியை வழங்கும், ஆனால் இவை மிகக் குறைந்த பகுதியில் மட்டும்தான் கிடைக்கும். இதனால் டேட்டா தேவை அதிகரிக்கும், சேவை வழங்கும் நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் சேவைகளை சரியாக பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.
ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி டவுன்லோட் வேகம் 6.6 சதவீதம் வரை ரிலையன்ஸ் ஜியோவை விட அதிகமாக இருக்கிறது. ஏர்டெல் 5ஜி அப்லோட் வேகமும் ஜியோவை விட 83 சதவீதம் வேகமாக இருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ஏர்டெல், ஜியோ, வி மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களின் டேட்டா எடுக்கப்பட்டது.
இதில் பி.எஸ்.என்.எல். மற்றும் வி இதுவரை 5ஜி சேவைகளை வெளியிடவில்லை. இதனால் 5ஜி பந்தயத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோ இடையில் தான் போட்டி நிலவுகிறது. இதில் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் முன்னணி 5ஜி சேவை வழங்கும் நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது. இது தொடர்பான பரிசோதனையில் ஏர்டெல் ஐந்து புள்ளிகளையும், ஜியோ மூன்று புள்ளிகளையுமே பெற்றுள்ளன.