tech news
ஐபோன் 15 சீரிஸை வாங்க நீங்க ரெடியா.? இணையத்தில் லீக் ஆனது அறிமுக தேதி..!
ஸ்மார்ட்போன் பயனர்களிடையே மிகவும் பிரபலாமான ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 15 சீரிஸ் (iPhone 15 Series) ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 13ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஐபோன் 15 சீரிஸில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்கள் ஐபோன் 14 ப்ரோ மாடலில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஐபோன் 14 ப்ரோ ஆனது ஏ16 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. அதே போல ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் ஸ்மார்ட்போனிலும் இந்த சிப் இடம்பெறலாம்.
அதே நேரத்தில் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் A17 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, ஐபோன் 14 சீரிஸ் ஆனது செப்டம்பர் 7ம் தேதி ஆப்பிளின் செப்டம்பர் ‘ஃபார் அவுட்’ நிகழ்வின் போது வெளியிடப்பட்டது. அதில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் செப்டம்பர் 9ம் தேதி தொடங்கியது.
இதே போல, ஐபோன் 15 சீரிஸும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் வெளியீட்டை பின்பற்றினால் தற்பொழுது பரவி வரும் வெளியீட்டு தேதியை நாம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். அதேபோல, ஐபோன் 15 சீரிஸுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் செப்டம்பர் 15 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆனால், ஐபோன் 15 வெளியீட்டு தேதியை ஆப்பிள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மேலும், ஐபோன் 15 சீரிஸைத் தவிர, ஆப்பிள் புதிய ஆப்பிள் வாட்ச், புதிய ஐபாட் மற்றும் புதிய மேக் மினி ஆகியவற்றிலும் வேலை செய்வதாக வதந்திகள் பரவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.