latest news
மும்பையில் மட்டும் 20 லட்சம் – 5ஜி பயனர்கள் எண்ணிக்கையில் மாஸ் காட்டும் ஏர்டெல்!
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று பாரதி ஏர்டெல். 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் நிறைவு பெற்றதில் இருந்து 5ஜி சேவையை வழங்கும் பணிகளில் ஏர்டெல் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவைகள் வெளியாகியுள்ள நிலையில், தொடர்ந்து அதிக இடங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மும்பையில் மட்டும் ஏர்டெல் 5ஜி பிளஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20 லட்சங்களை கடந்துள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிட்ட முதல் நிறுவனமாக பாரதி ஏர்டெல் இருக்கிறது. முதற்கட்டமாக எட்டு நகரங்களில் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவைகள் வெளியிடப்பட்டன. இந்த எட்டு நகரங்கள் பட்டியலில் மும்பையும் இடம்பெற்று இருந்தது. தற்போது நாடு முழுக்க 3 ஆயிரம் நகரங்கள் மற்றும் டவுன்களில் ஏர்டெல் 5ஜி சேவைகள் கிடைக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம் ஏர்டெல் சேவையில் ஒரு கோடி பேர் 5ஜி நெட்வொர்க்கில் இணைந்துள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்தது.
பின் மார்ச் மாதத்தில் பத்து லட்சம் பயனர்கள் மும்பையில் மட்டுமே 5ஜி சேவையை பயன்படுத்தி வருகின்றனர் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்தது. தனது 5ஜி நெட்வொர்க்கை எத்தனை 5ஜி சந்தாதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்ற விவரங்களை ஏர்டெல் நிறுவனம் மட்டுமே பொதுவெளியில் அறிவித்து வருகிறது. இந்தியாவில் 5ஜி சேவைகள் வெளியிட துவங்கிய ஏழு மாதங்களில் இந்த மைல்கல் எட்டியிருக்கிறோம் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
நாட்டின் வணிக மற்றும் பொழுதுபோக்கு தலைநகர் என்று கூறப்படும் மும்பையின் டவுன் மற்றும் தாலுக்கா என்று அனைத்து இடங்களிலும் 5ஜி சேவையை பெற்ற முதல் நகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதன் மூலம் மும்பை, நவி மும்பை, தானே, கல்யான்-தொம்பிவாலி மற்றும் மிரா பயாந்தர் என்று நகரம் முழுக்க அதிவேக 5ஜி கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவைகள் மும்பை முழுக்க பரவலாக வழங்கப்பட்டு இருக்கிறது.
முக்கிய வியாபார தளங்கள், போக்குவரத்து, சுற்றுலா தளங்கள், குடியிருப்புகள் மற்றும் கல்வி நிறுவன வளாகங்களில் இது அதிவேக, சீரான கனெக்டிவிட்டியை வழங்கி வருகிறது. பிகேசி, நரிமன் பாயிண்ட் மற்றும் லோயல் பரெல் போன்ற வியாபார பகுதிகளில் இருப்பவர்கள் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கின் அதிவேக இணைய வசதியை பயன்படுத்த முடியும். சத்ரபதி சிவாஜி பேருந்து நிலையம், மும்பை மெட்ரோ லைன், மும்மை மோனோரெயில் மற்றும் ரயில்வே நிலையங்களில் தங்குதடையற்ற நெட்வொர்க் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.