tech news
ரூ. 1000 கோடி பட்ஜெட்.. சென்னையில் கேப்ஜெமினியின் புது ஆஃபீஸ்
ஐடி துறையில் பிரபல நிறுவனம் கேப்ஜெமினி. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறது. ஐடி சேவைகள் வழங்குவதில் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில், கேப்ஜெமினி நிறுவனத்தின் புதிய அலுவலகம் சென்னையில் உருவாகிறது.
இதற்காக கேப்ஜெமினி நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக முதிலீடு செய்ய இருக்கிறது. இதற்காக கேப்ஜெமினி மற்றும் தமிழக அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருப்பதாக தெரிகிறது.
கேப்ஜெமினியின் புதிய நிறுவனம் 6 லட்சம் சதுர நிலப்பரப்பில் உருவாக இருக்கிறது. இதில் ஒரே நேரத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் ஒன்றாக பணியாற்ற முடியும். இதில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.
புதிய வளாகத்தில் கேப்ஜெமினியின் நிதி சேவைகள், பொறியியல், டிஜிட்டல், கிளவுட், ஏ.ஐ. உள்பட பல்வேறு விசேஷ குழுக்கள் பணியாற்றும் என்று தெரிகிறது. கூடுதலாக இந்த வளாகத்தில் வெல்னஸ் செண்டர்கள், டவுன் ஹால்கள், உடற்பயிற்சி கூடங்கள், அதிநவீன உணவகம் என ஏராளமான வசதிகள் இடம்பெற்று இருக்கும்.
இந்த வளாகம் 2027 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. இதில் உள்நாட்டு வேலைவாய்ப்புகள் அதிகப்படுத்தப்படும் என்றும் இது தமிழகத்தின் வளர்ச்சியில் மிகமுக்கிய பங்காற்றும் என்று கூறப்படுகிறது. இதோடு, இந்ச வளாகம் அமைக்கப்படும் பகுதியை சுற்றியுள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்த கேப்ஜெமினி நிறுவனம் சார்பில் ரூ. 3 கோடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.