ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய சாதனம் உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சாதனம் பற்றி பலமுறை இணையத்தில் தகவல்கள் லீக் ஆகியுள்ளன. இதேபோல் பலமுறை ஆப்பிள் மடிக்கக்கூடிய சாதனம் உருவாக்கும் திட்டத்தை நிறுத்திவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளன. எனினும், கடந்த சில மாதங்களாக மடிக்கக்கூடிய ஐபோன் பற்றிய விவரங்கள் மீண்டும் வெளியாக தொடங்கியுள்ளன.
அந்த வரிசையில் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனத்தின் ஆரம்பக்கட்ட உற்பத்தி பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிகிறது. விரைவில், மடிக்கக்கூடிய ஐபோனின் ப்ரோடோடைப் மாடல் டெஸ்டிங் நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த மாடலின் பொறியியல் உறுதிப்படுத்தல் பரிசோதனை (EVT-Engineering Verification Test) நடைபெற இருக்கிறது.
இந்த பணிகள் முழுமை பெற்றதும் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம். இது தொடர்பாக டிஜிடைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் ப்ரோட்டைப் (P1) நிலையை கடந்த ஜூன் மாதம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து P2, P3 நிலைகளை தொடர்ந்து EVT நிலையை அடைந்து பிறகு அதிக எண்ணிக்கையில் விற்பனைக்கு உற்பத்தி செய்யப்படும்.
மடிக்கக்கூடிய சாதனங்கள் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே உள்ள போட்டியை மேலும் வலுப்படுத்தும் என்றே சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் சாம்சங் கேலக்ஸி Z சீரிஸ், பிக்சல் போல்டு மற்றும் இதர சீன பிராண்டுகளின் மடிக்கக்கூடிய சாதனங்களுக்கு போட்டியாக இருக்கும்.
அமெரிக்காவில் புதிய மடிக்கக்கூடிய ஐபோனின் விலை 2300 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,99,000 முதல் தொடங்கும் என்று தெரிகிறது. இந்த மாடலில் லிக்விட் ஹிஞ்ச் வழங்கப்படும் என்றும் உள்புறத்தில் 7.8 இன்ச் டிஸ்ப்ளே, 5.5 இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது மடிக்கப்பட்ட நிலையில், 9.2mm அளவில் தடிமனாக இருக்கும் என்றும் திறக்கப்பட்டதும் 4.6mm அளவிலும் இருக்கும் என்று தெரிகிறது. இதன் பக்கவாட்டில் டச் ஐடி கைரேகை சென்சார் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.