tech news
மிரட்டும் AI, பங்கம் செய்யும் கேமரா.. புது Pixel போன்களின் இந்திய விலை எவ்வளவு?
கூகுள் நிறுவனம் ஒருவழியாக பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்துவிட்டது. இந்த முறை மூன்று புதிய மாடல்கள் பிக்சல் சீரிசில் இடம்பெற்றுள்ளன. இவை பிக்சல் 9, பிக்சல் 9 ப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ XL என அழைக்கப்படுகின்றன.
பயனர் தேவைக்கு ஏற்ப மூன்று மாடல்களும் அதற்குரிய அம்சங்களை கொண்டிருக்கின்றன. இதில் பிக்சல் 9 ப்ரோ XL ஸ்மார்ட்போன் டாப் என்ட் மாடல் ஆகும். இதில் என்ட்ரி லெவல் மாடலாக பிக்சல் 9 ஸ்மார்ட்போன் உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை பிக்சல் மற்றும் பிக்சல் 9 ப்ரோ மாடல்களில் 6.3 இன்ச் OLED 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, கூகுள் டென்சார் G4 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 9 மாடலில் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 48MP லென்ஸ் மற்றும் 10.5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
பிக்சல் 9 ப்ரோ மாடலில் 50MP பிரைமரி கேமரா, 48MP லென்ஸ், 48MP சென்சார் மற்றும் 42MP செல்பி கேமரா உள்ளது. இரு மாடல்களிலும் 4700mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் வசதி உள்ளது. பிக்சல் 9 ப்ரோ XL மாடலில் 6.8 இன்ச் OLED 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, கூகுள் டென்சார் G4 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 48MP லென்ஸ், 48MP சென்சார் மற்றும் 42MP செல்பி கேமரா உள்ளது. இத்துடன் 5060mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் வசதி உள்ளது.
பிக்சல் 9 சீரிஸ் மாடல்களுடன் அந்நிறுவனம் தனது பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது இந்தியாவில் அந்நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய சாதனம் ஆகும். இதில் 8 இன்ச் OLED ஸ்கிரீன், 6.3 இன்ச் OLED கவர் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 120Hz வரையிலான ரிப்ரெஷ் ரேட் (இரு டிஸ்ப்ளேக்களிலும்), டென்சார் G4 பிராசஸர் உள்ளது.
இத்துடன் 48MP பிரைமரி கேமரா, 10.5MP அல்ட்ரா வைடு லென்ஸ், 10.8MP டெலிபோட்டோ கேமரா, 10MP கவர் கேமரா, 10MP உள்புற டிஸ்ப்ளே கேமரா, 4650mAh பேட்டரி, 45W சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய பிக்சல் போன்களை வாங்கும் போதே ஒரு வருடத்திற்கான ஜெமினி ஏஐ சந்தா வழங்கப்படுகிறது. இது பயனர்களுக்கு ஏராளமான வசதிகளை வழங்குகிறது. புகைப்படங்களை எடுப்பதில் துவங்கி, அவற்றை எடிட் செய்வது, வரைபடங்களை உருவாக்குவது, வானிலை விவரங்களை அறிந்து கொள்வது என பெரும்பாலான அம்சங்கள் ஏஐ வசதியை பெறுகின்றன.
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் பிக்சல் 9 ஸ்மார்ட்போனின் 128GB வேரியண்ட் விலை ரூ. 74,999 என்றும் பிக்சல் 9 ப்ரோ விலை ரூ. 94,999 என்றும் பிக்சல் 9 ப்ரோ XL விலை ரூ. 1,14,999 என்றும் துவங்குகிறது. பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அப்சிடியன், பொர்சிலைன், வின்டர்கிரீன், பியோனி, ஹசெல் மற்றும் ரோஸ் குவாட்ஸ் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
மூன்று மாடல்களும் ப்ளிப்கார்ட், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும். விற்பனை ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்க உள்ளன.