Connect with us

tech news

இந்தியாவில் உற்பத்தியாகி உலக நாடுகளுக்கு செல்லும் பிக்சல் போன்கள்?

Published

on

கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இதில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கணிசமான யூனிட்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் பிக்சல் போன்களை உற்பத்தி செய்யும் பணிகளில் இருவேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து கூகுள் நிறுவனம் வரும் மாதங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று தெரிகிறது.

இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் தமிழகத்தின் ஃபாக்ஸ்கான் ஆலையில், முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் பிக்சல் போன்களின் உற்பத்தி துவங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களையும் உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிக்சல் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்வதற்கான களமாக இந்தியாவை மாற்றிக் கொள்ளும் பணிகளில் கூகுள் நிறுவனம் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக இந்தியாவில் இருந்து பிக்சல் போன்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. அதன்பிறகு தேவைக்கு ஏற்ப அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்யப்படலாம் என்று தெரிகிறது.

இதனிடையே கூகுள் நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கும் பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் AI சார்ந்த ஏராளமான அம்சங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போதைய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களில் ஏஐ சார்ந்த அம்சங்கள் அதிகளவில் வழங்கப்பட்டு வருவதை அடுத்து, கூகுள் நிறுவனமும் அதற்கு ஏற்ப தயாராகி வருகிறது.

ஏற்கனவே கூகுள் நிறுவனம் ஏஐ சார்ந்து பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறது. மேலும், கூகுள் டெவலப்பர்கள் நிகழ்வில் இதுபற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.

google news