tech news
95% பெண்கள் தான்… மொத்தம் 500 ஊழியர்கள்… சென்னையிலேயே ரெடியாகும் நத்திங் போன் 3

நத்திங் நிறுவனம் தனது போன் (3) மாடலை வருகிற ஜூலை 1-ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் புதிய நத்திங் போன் (3) மாடல் ப்ளிப்கார்ட் ஆன்லைன் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மர்ட்போன் நத்திங் நிறுவனத்தின் உண்மையான ஃபிளாக்ஷிப் மாடல் என்று கூறப்படுகிறது.
அதன்படி புதிய நத்திங் ஸ்மார்ட்போன் மிகவும் சக்திவாய்ந்த ஹார்டுவேர் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். நத்திங் போன் (3) மாடலில் இருந்து அந்நிறுவனம் க்ளிம்ப் இன்டர்ஃபேஸ்-க்கு விடை கொடுப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. அந்த வகையில், புதிய ஸ்மார்ட்போனில் டாட் மேட்ரிக்ஸ் டிசைன் வழங்கப்படுகிறது.
பதிய நத்திங் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், இந்த ஸ்மோர்ட்போனின் உற்பத்தி குறித்து அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நத்திங் போன் (3) ஸ்மார்ட்போன் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளது. இப்படி செய்வதன் மூலம் இந்தியாவில் தனது இருப்பை விரிவுப்படுத்த முடியும் என்று நத்திங் தெரிவித்துள்ளது.
நத்திங் போன் (3) ஸ்மார்ட்போன் சென்னையில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த ஆலையில் மொத்தம் 500 ஊழியர்கள் பணியாற்றுவர். இவர்களில், கிட்டத்தட்ட 95 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதன் மூலம் புதிய நத்திங் போன் (3) மாடலின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உற்பத்தியை தொடர்ந்து, விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் குறித்தும் நத்திங் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அப்படியாக நத்திங் நிறுவனம் தற்போது இந்தியாவில் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை மற்றும் ஐதராபாத் என ஐந்து நகரங்களில் பிரத்யேக சர்வீஸ் சென்டர்களை வைத்திருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
இதுதவிர 330-க்கும் அதிகமான எண்ணிக்கையில் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்கள் உள்ளன. விற்பனையை பொருத்தவரை 2,000 ஸ்டோர்களில் இருந்து தற்போது 10,000 ஸ்டோர்கள் உள்ளன.
நத்திங் போன் (3) அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் இரட்டை கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்படுவது உறுதியாகி இருக்கிறது. இதில் ஒன்று பிரைமரி கேமரா மற்றொன்று பெரிஸ்கோப் லென்ஸ் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் க்ளிம்ப் டிசைனுக்கு பதிலாக டாட்-மேட்ரிக்ஸ் டிசைன் வழங்கப்படுகிறது.
விலையை பொருத்தவரை நத்திங் போன் (3) மாடல் விலை 799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 68,800 முதல் துவங்கும் என்று கூறப்படுகிறது. நத்திங் போன் (3) மட்டுமின்றி இந்நிறுவனம் ஓவர் தி இயர் ஹெட்போன் பிரிவிலும் களமிறங்குகிறது. புதிய போன் (3) மாடலுடன் ஹெட்போன் (1) மாடலையும் நத்திங் நிறுவனம் ஒரே நாளில் அறிமுகம் செய்ய உள்ளது.
