latest news
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டம் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பபட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
இந்த இன்டர்ன்ஷிப்கள் தலைசிறந்த பணியிட அனுபவத்தை வழங்கும் நோக்கில் வழங்கப்படுகின்றன. இதில் பங்கேற்கும் இளைஞர்கள் இந்தத் திட்டத்தை முடித்த பிறகு உடனடி வேலையில் சேர்வவதை எளிமையாக்குகிறது. தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தில் இருந்து பயனடைய அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பங்கேற்க கீழ்வரும் தகுதி இருப்பது அவசியம் ஆகும்..,
- வயது வரம்பு: 21 முதல் 24 வயது வரை
- முழுநேர வேலையில் ஈடுபடக் கூடாது
- அரசு ஊழியர்களைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த தனிநபர்கள் தகுதியற்றவர்கள்
- ஐஐடிகள், ஐஐஎம்கள் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களிலிருந்து பட்டதாரிகள் அல்லது CA அல்லது CMA போன்ற தகுதிகள் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ITIகள்) மற்றும் கௌஷல் கேந்திரா (திறன் மையங்கள்) ஆகியவற்றில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.
இந்தத் திட்டத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாத உதவித்தொகையாக ரூ. 4,500-ஐ அரசிடமிருந்து பெற முடியும். இதோடு நிறுவனங்கள் சார்பில் கூடுதலாக ரூ. 500 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை சமூகப் பொறுப்பு (CSR) முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக வழங்கப்படும்.
மாதாந்திர உதவித்தொகை பெறுவது மட்டுமின்றி, விண்ணப்பதாரர்கள் திடீர் செலவுகளை ஈடுகட்ட ஒரு முறை மட்டும் ரூ. 6,000 நிதி உதவியைப் பெறலாம். பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா போன்ற திட்டங்களின் கீழ் பயிற்சியாளர்கள் காப்பீடு செய்யப்படுவதையும் அரசாங்கம் உறுதி செய்யும். இதோடு, பிரீமியம் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும்.
பதிவு செய்வது எப்படி?
- அக்டோபர் 12 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் மத்திய அரசின் கார்ப்பரேட் விவகாரங்கள் துறைக்கான அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.pminternship) பதிவு செய்ய வேண்டும்.
- இதைத் தொடர்ந்து விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்யும் பணி அக்டோபர் 27 ஆம் தேதி துவங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறும். இதன் பிறகு நவம்பர் 8 ஆம் தேதியில் இருந்து 15 ஆம் தேதிக்குள் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் இணைவதற்கான கடிதம் வழங்கப்படும்.
- இந்தத் திட்டத்தில் இணையும் முதற்கட்ட இன்டர்ன்கள் தங்களின் ஓராண்டு கால வேலைவாய்ப்பு பயிற்சியை டிசம்பர் 2 ஆம் தேதி முதல் துவங்குவர்.