tech news
உலகிலேயே குட்டி 5ஜி ஸ்மார்ட்போன் – வேற லெவல் டிசைன், அம்சங்கள் என்னென்ன தெரியுமா?
யுனிஹெர்ட்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் உலகின் மிகச்சிறிய 5ஜி போன் என்ற பெருமையுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்னென்ன என்பதை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கிறது.
ஜெல்லி மேக்ஸ் என்று அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸர், 12GB LPDDR5 ரேம், 256GB UFS 3.1 மெமரி வழங்கப்படுகிறது. அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்துவரும் ஜெல்லி ஸ்டார் ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது, புதிய மாடலில் 54% அதிவேக CPU, 87% சிறப்பான GPU மற்றும் 37% வேகமான மெமரி மற்றும் 30% வரை மின்திறனை சிறப்பாக கையாளும் திறன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் அளவீடுகள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனில் 4000mAh பேட்டரி வழங்கப்படுகிறது. இது சிறய ஸ்மார்ட்போன்களில் நீண்ட நேரம் பயன்படுத்த முடியும். இத்துடன் 66W சார்ஜிங் உள்ளதால், இந்த ஸ்மார்ட்போனை 20 நிமிடங்களில் 90% வரை சார்ஜ் செய்திட முடியும்.
தற்போது வரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ஐபோன் 13 மினி போன்ற அளவில் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் கிரவுட்ஃபன்டிங் முறையில் விற்பனைக்கு வரவிருக்கிறது.
இதுதவிர யுனிஹெர்ட்ஸ் நிறுவனம் உண்மையான கீபோர்ட் கொண்ட மற்றொரு போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மொபைல் போன் பயனர்களுக்கு பழையபடி கீபோர்டு டைப்பிங் அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.